மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

அங்கீகாரம்: 3,000 பள்ளி மாணவர்கள் பாதிப்பு!

அங்கீகாரம்: 3,000 பள்ளி மாணவர்கள் பாதிப்பு!

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 2016-2017 கல்வியாண்டில் 8.93 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். 2017-2018 கல்வியாண்டில் கூடுதலாக 7,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களைக் கண்காணிக்க, விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்களைப் பார் குறியீட்டுடன் அச்சிட தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அரசு தேர்வுகள் இயக்குநரகம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, டிசம்பர் மாதம் விடைத்தாள்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அதற்குத் தடை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கிட்டத்தட்ட 50 சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளிகள் அரசாங்க அங்கீகாரமின்றி இயங்கின. முன்னதாக அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் உள்ள பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் ஆவணங்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி, சேர்க்கைக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவில் இயங்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டுமே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் விரைவில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதைத் தொடர்ந்து, பள்ளி கட்டடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வின் முடிவில், சுமார் 746 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி 2016 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 746 பள்ளிக்கூடங்களுக்கு விதிமுறைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாகக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தைக்கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய பள்ளிகள் தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon