மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 7 டிச 2019

சத்துணவுத் திட்டத்தில் முட்டை நிறுத்தமா?

சத்துணவுத் திட்டத்தில் முட்டை நிறுத்தமா?

‘விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி சத்துணவில் முட்டை வழங்குவதை நிறுத்தக் கூடாது’ என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (நவம்பர் 20) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சுமார் 69 லட்சம் பள்ளி மாணவ – மாணவியர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுவரும் சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான முட்டைகளைக் கொள்முதல் செய்வதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியிருப்பதால், சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை” என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், அரசின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“முதன்முதலில், 1989ஆம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டத்தில், இரு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கவும், பிறகு 1998இல் வாரத்துக்கு ஒரு முட்டை வழங்கவும் உத்தரவிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவும், வறுமையால் பள்ளிக்கூடங்களில் இருந்து நிற்கும் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேரவும் வழிவகுத்த பெருமை திமுக தலைவர் கருணாநிதியையே சாரும். 2006இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக வாரத்துக்கு இரண்டு முட்டை வழங்கவும், 15.7.2007 முதல் வாரத்துக்கு மூன்று முட்டைகள் வழங்கவும் உத்தரவிட்டு, சத்துணவுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தியது” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “சிறப்புக்குரிய இந்தச் சத்துணவுத் திட்டத்தில் ‘கலவை சாதம்’ போடுவதாகக் குழப்பத்தை ஏற்படுத்திய அதிமுக அரசு, சத்துணவு ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்தியது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இந்த நிலையில், முட்டை விலை அதிகமாகி விட்டது என்று காரணம் காட்டி முட்டைகள் கொள்முதலை நிறுத்தி, சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவது வேதனையானது” எனத் தெரிவித்துள்ள அவர், “குழந்தைகளின் எதிர்காலம் பற்றியோ, கல்வி வளர்ச்சி குறித்தோ, மாணவ - மாணவியர் பெற வேண்டிய ஊட்டச்சத்து பற்றியோ கவலையும், அக்கறையும் இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவது வெட்கக்கேடானது” எனவும் விமர்சித்துள்ளார்.

“சத்துணவுத் திட்டத்தில் இந்தக் குழப்பநிலை நீடிப்பது எதிர்கால சமுதாயத்தையே வீழ்த்தக்கூடிய படுபாதகச் செயல்” என்றும், “உடனடியாக போதிய முட்டைகள் கொள்முதல் செய்து, ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதோடு, சமூகநலத்துறைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பள்ளிக் குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தைச் செம்மையாக நடத்துவதிலும், மாணவ - மாணவியரின் உடல் ஆரோக்கியத்திலும், கல்வி முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஸ்டாலினின் குற்றச்சாட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுத்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழக சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் முட்டை விநியோகம் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலர் மணிவாசன் விளக்கமளித்துள்ளார்.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon