மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

விண்ணை முட்டும் முட்டை விலை!

விண்ணை முட்டும் முட்டை விலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டை விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஆன்லைன் நிறுவனமான பவுல்டிரி பஜார் மூலம் கிடைத்த தகவலின்படி, ஹைதராபாத் மொத்த விற்பனை மையத்தில் அக்டோபர் மாதம் ரூ.3.79ஆக இருந்த முட்டை ஒன்றின் விலை தற்போது ரூ.4.54ஆக அதிகரித்துள்ளது. புனே சந்தையில் ரூ.4.15ஆக இருந்த முட்டையின் விலை ரூ.4.98ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6 வரை முட்டை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்ராம் யாதவ் கூறுகையில், “உற்பத்திக் குறைவு காரணமாக முட்டை விநியோகம் குறைந்துள்ளது. இந்த நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. அதேநேரம் கோழி இறைச்சி உற்பத்தி அதிகமாகியுள்ளது. அதிக இருப்பு காரணமாகக் கோழிகளை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் விற்கும் முயற்சியில் அதன் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் முட்டைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தும், முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் தற்போது விலையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்த விற்பனைச் சந்தையில் முட்டை விலை 25 முதல் 50 காசுகள் வரை உயர்ந்தால் சில்லறை விற்பனைச் சந்தையில் ரூ.0.50 முதல் 1 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக நுகர்வோரிடையே முட்டைப் பயன்பாடு குறைந்துள்ளது. மேலும், இது கார்த்திகை மாதம் என்பதால் தென்பகுதிகளில் முட்டை உண்போர் எண்ணிக்கை இன்னும் குறைந்துள்ளது.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon