மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 14 அக் 2019

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் என்ற நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐ.நா. பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளைத் தேர்வு செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான நீதிபதிகள் தேர்வில் இந்தியா, இங்கிலாந்துக்கிடையே கடும் போட்டி நிலவியது.

நீதிபதி தேர்வில் வெற்றிபெறுவதற்காக, இங்கிலாந்து ஜனநாயமற்ற முறைகளைக் கையாள்வதாக, இந்தியா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், நீதிபதி தேர்வில் முன்மொழியப்பட்ட கிறிஸ்டோபர் கிரீன்வுட்டின் விண்ணப்பத்தைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அறிவித்தது. இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதியாக உள்ள தல்வீர் பண்டாரி, இந்தியா சார்பில் நிறுத்தப்பட்டார். பலகட்டங்களாக நடந்த தேர்தல்கள் முடிவில், ஐ.நா. பொது சபையில் 193 வாக்குகளில் அவர் 183 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாதுகாப்பு கவுன்சிலில் அவருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. தல்வீர் பண்டாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாகச் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 70 வயதான இவரது பதவிக்காலம் 2018 பிப்ரவரியில் முடிகிறது. இதையடுத்து, வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

சர்வதேச நீதிமன்றம் தொடங்கப்பட்டு, கடந்த 71 ஆண்டுகள் வரலாற்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்கூட இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். சர்வதேச நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அவர் இருந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டில் அவர் இப்பதவிக்கு முதன்முதலில் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தலில் வெற்றிபெற்றதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon