மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

இனி ரேடியம் பூசப்பட்ட நம்பர் பிளேட்டுகள்!

இனி ரேடியம் பூசப்பட்ட நம்பர் பிளேட்டுகள்!

நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடகாவில் வாகனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரே மாதிரியான புதிய நம்பர் பிளேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் இரு சக்கர வாகனத் திருட்டும் திருடப்பட்ட வாகனங்களைச் சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துவருகின்றன. கர்நாடகாவில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக ரேவண்ணா சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வாகன நம்பர் பிளேட்டுகளில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, புதிய நடைமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் போல நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தும் போக்கு இனி கிடையாது. அதற்குப் பதிலாக அனைவரும் ஒரே மாதிரியான புதிய நம்பர் பிளேட்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாநிலப் போக்குவரத்துத் துறை முடிவுசெய்துள்ளது. இதற்காகப் புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

தற்பொழுது நம்பர் பிளேட்டுகளின் விலை குறைந்தபட்சம் ரூ.1000ஆக உள்ளது. புதிதாக அறிமுகமாக உள்ள நம்பர் பிளேட்டுகளின் விலை ரூ.1200ஆக இருக்கும்.

புதிய நம்பர் பிளேட்டுகளின் சிறப்பம்சம்:

நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்கள் வழக்கத்தினை விடப் பெரிய அளவில் இருக்கும்.

இரவில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் பிளேட்டுகளில் பயன்படுத்தப்படும் வண்ணங்களில் ரேடியம் பூசப்பட்டிருக்கும்.

தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு எனத் தனித்தனி எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும்.

எழுத்துக்கள் 45 டிகிரி சாய்வான கோணத்திலும் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேம்பட்ட பாதுகாப்புத்தன்மைக்கு என குரோமியம் ஹாலோகிராம் இணைத்துப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இத்தகைய நம்பர் பிளேட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் சிசிடிவி காட்சிகளைக் காவல்துறை கைப்பற்றினர். ஆனால் அதிலிருந்து வாகனம் தொடர்பான தகவல்கள் எதையும் அவர்களால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, கர்நாடக அரசின் இந்த புதிய நம்பர் பிளேட்டுகள் முறையினால் இது போன்ற நிகழ்வுகளில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 66 லட்சம் வாகனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon