மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

கார் விற்பனை: மாருதி சுசுகி ஆதிக்கம்!

கார் விற்பனை: மாருதி சுசுகி ஆதிக்கம்!

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையாகிய பயணிகள் வாகனங்களுக்கான பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் 50.12 சதவிகிதச் சந்தைப் பங்குகளுடன் முதலிடத்திலும், ஹூண்டாய் நிறுவனம் 16.44 சதவிகிதப் பங்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. எஞ்சிய உற்பத்தியாளர்கள் ஒற்றை இலக்கப் பங்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதிகம் விற்பனையாகிய பயணிகள் வாகனங்களுக்கான பட்டியலில் மாருதி நிறுவனதின் நிறைய மாடல்கள் இடம்பெற்று இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான கார் விற்பனையில் முதலிடத்திலிருந்த மாருதி டிசையர் கார் அக்டோபர் மாதத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாருதி ஆல்டோ 19,447 கார்கள் விற்பனையாகி முதலிடத்தையும், டிசையர் 17,447 கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களுக்கான பட்டியலில் மாருதி நிறுவனத்தின் 7 கார்கள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய மூன்று மாடல்கள் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனக் கார்களாகும்.

இப்பட்டியலில் ஆல்டோ மற்றும் டிசையரைத் தொடர்ந்து மாருதி பலேனோ 14,532 கார்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்திலும், ஹூண்டாய் கிராண்ட் ஐ-10 (14,417 கார்கள்) நான்காவது இடத்திலும், மாருதி வேகன்-ஆர் (13,043 கார்கள்) ஐந்தாவது இடத்திலும், மாருதி செலிரியோ (12,209 கார்கள்) ஆறாவது இடத்திலும், மாருதி ஸ்விஃப்ட் (12,057 கார்கள்) ஏழாவது இடத்திலும், மாருதி விடாரா ப்ரெஸ்ஸா (11,684 கார்கள்) எட்டாவது இடத்திலும், ஹூண்டாயின் எலைட் ஐ-20 (11,012 கார்கள்) ஒன்பதாவது இடத்திலும், ஹூண்டாய் கிரெட்டா (9,248 கார்கள்) பத்தாவது இடத்திலும் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon