மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

தமிழக சட்டமன்றத்தை கூட்ட தயாரா?

தமிழக சட்டமன்றத்தை கூட்ட தயாரா?

நெல்லையில் நேற்று (நவம்பர் 20) நடந்த விழாவில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட, எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறாரா?’ என்று கேள்வியெழுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நேற்று திமுக சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவளவிழா மற்றும் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆகியன ஒன்றிணைந்து நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது, ‘தமிழக மக்கள் எதிர்பார்ப்பது போல விரைவில் திமுக ஆட்சி மலரும். திமுகவில் சேரும் இவர்கள் அனைவரும், தமிழகத்தைக் காப்பாற்றவே இங்கு வந்திருக்கின்றனர்’ என்றார்.

தனது பேச்சில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், அதிமுகவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். ”எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசு திட்டங்களை அறிவிப்பதை விட்டுவிட்டு, தி.மு.க.வை விமர்சிக்கின்றனர். அதில் ஒன்றாக, 2006-ல் இருந்து 2011 வரை தி.மு.க மைனாரிட்டி ஆட்சி நடத்தியது என்று பேசுகிறார்கள்.

மைனாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்தாலும், 5 ஆண்டுகளாக காங்கிரஸ், பா.ம.க. உதவியோடு சிறப்பான ஆட்சியை நடத்தினார் கலைஞர். ஆனால் எடப்பாடி பழனிசாமி நிலை என்ன? தெம்பும் தைரியமும் இருந்தால், தமிழக சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட அவர் தயாராக இருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

’திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களைக் கிடப்பில் போட்ட அதிமுக அரசு, புதிதாக என்ன செய்தது’ என்றவர், ’மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு. அந்த நிலையை உருவாக்க அனைவரும் தயாராவோம்’ என்று பேசினார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon