மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

போலியாக விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை!

போலியாக விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை!

கடந்த 5 ஆண்டுகளில் 2800 பேர் பழங்குடியினத்தவர் என்று போலியாக விண்ணப்பித்து திருமண உதவித்தொகை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு ரூ.25000 முதல் ரூ.50,000 வரை திருமண உதவித்தொகையும், 4 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டுவருகிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழைப் பெண்களுக்குச் சமூக நலத் துறை சார்பில் 5 பிரிவுகளின் கீழ் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேவதாசி முறையை ஒழித்த சமூக புரட்சியாளர் மூவலூர் ராமாமிர்தம் பெயரில் வழங்கப்படும் உதவித்தொகையும் அதில் ஒன்று.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 72,000-க்கு குறைவாக உள்ள, 5ஆம் வகுப்பு வரை படித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை பெற முடியும். தேவையான ஆவணங்களுடன் திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

2011ஆம் ஆண்டு முதல் பழங்குடியினப் பிரிவின் கீழ் திருமண உதவித்தொகை பெற அனுப்பிய விண்ணப்பங்களில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. எனினும் 2011ஆம் முதல் 2016 ஆண்டு வரை போலியாக விண்ணப்பித்த சுமார் 3000 பேருக்குத் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதில் 680 பேர் பழங்குடி இனத்தவர் அல்லாத பிற பிரிவினர். மேலும் பலர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை.

5 ஆம் வகுப்பு வரை படித்த பல பெண்கள் பழங்குடி இனத்தவர் என்ற பெயரில் போலியாக விண்ணப்பித்துத் திருமண உதவித்தொகை பெற்றுள்ளனர். ஆனால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த 1500 பேர் தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்தும் அவர்களுக்குத் திருமண உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் கூறும்போது “பயனாளிகளை நேரில் கண்டு ஆய்வு செய்யும் அதிகாரிகள் செய்யும் குற்றங்களால்தான் இது போன்ற தவறுகள் நடக்கிறது. திருமண உதவித்தொகை பெறுவதில் மோசடி நடப்பது சமீபத்தில்தான் எங்கள் கவனத்திற்கு வந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்குத் திருமண உதவித்தொகை மறுக்கப்பட்ட காரணம் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon