மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு!

5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு!

உலகில் 5 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுவதாக நேற்று (நவம்பர் 20) துபாயில் தொடங்கிய சர்வதேச குழந்தைகள் தின மாநாட்டில் அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

5ஆவது சர்வதேசக் குழந்தைகள் தின மாநாடு துபாயில் நேற்று தொடங்கியது. சர்வதேசக் குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பு சார்பில் இந்த மாநாடு தொடங்கப்பட்டது.

அப்போது சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைல் முகம்மது கூறியதாவது:

“இந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினமானது ‘சட்டத்தில் இருந்து செயல்பாடு வரை’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. அரபு நாடுகள் எவ்வாறு தங்கள் நாடுகளில் குழந்தைகள் வன்கொடுமையைத் தடுத்து அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு அளித்துள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த நாளானது கடந்த 1989ஆம் ஆண்டு ஐ.நா. சபை குழந்தைகள் உரிமைகள் குறித்து முதன்முறையாக ஒரு மாநாட்டை நடத்திய நாள். அதனால் இந்த நாளை ஆண்டுதோறும் சர்வதேச அளவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடிவருகிறோம். உலகம் எதிர்கொள்கின்ற சவால்களில் மிக முக்கியமானது குழந்தைகள் மீதான வன்முறை.

குழந்தைகள் வெளியில் இருந்து மட்டுமல்லாமல், தாங்கள் வசிக்கும் வீடுகளில் பெற்றோருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என தன் சுற்று வட்டாரத்திலேயே வன்முறையை எதிர்கொள்ளும் கொடுமைகள் தற்போது நிகழ்ந்துவருகிறது. உலகில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அந்தக் குழந்தைகள் வன்கொடுமையால் உயிரிழக்கும் பரிதாபமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உலக அளவில் குழந்தைகளுக்கான உரிமைகளைப் பாதுகாத்து அவர்கள் மீதான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காகச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாடு நாளையும் (நவம்பர் 22) நடக்கிறது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon