இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி கடந்த அக்டோபர் மாதத்தில் 41 சதவிகிதம் சரிந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உள்ளிட்ட சில சலுகைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆடைகளுக்கான விலையும் 12 முதல் 15 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. இதனால் அக்டோபர் மாதத்தில் ரூ.5,398.08 கோடிக்கு மட்டுமே ஆயத்த ஆடைகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாத ஏற்றுமதியான ரூ.9,100.75 கோடியை விட 41 சதவிகிதம் குறைவாகும். முன்னதாக செப்டம்பர் மாதத்தில் 25 சதவிகித உயர்வுடன் ரூ.10,707 கோடிக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்களிப்பு 14 சதவிகிதமாக உள்ளது. மேலும், அதிகப் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவரும் துறையாகவும் இது உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்குச் சலுகைகள் குறைவாக இருந்தாலும் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், வங்கதேசம், வியட்நாம், இலங்கை, கம்போடியா உள்ளிட்ட நாடுகளிடையே இந்தியாவுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. மேற்கூறிய நாடுகளை விட, ஆடைகளுக்கான விலை இந்தியாவில் 8 முதல் 10 சதவிகிதம் கூடுதலாகவே உள்ளது.