மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

ரஜினி பயணம்: ஆன்மிகமா, அரசியலா?

ரஜினி பயணம்: ஆன்மிகமா, அரசியலா?

ராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் மந்த்ராலயம் ராகவேந்திரா கோவிலில் ஆன்மிக வழிபாட்டில் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ரஜினிகாந்த் அவ்வப்போது ஆன்மிகப் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. தனது படங்களின் பணிகள் நிறைவடைந்ததும் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்குச் சென்று தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் ரஜினி. இந்நிலையில், தற்போது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்திலுள்ள பில்கிரிம் கிராமத்திலுள்ள புகழ்பெற்ற மந்த்ராலயம் கோவிலில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் சாமியை தரிசிக்க இன்று (நவம்பர் 21) காலை சென்றுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கோவில் பிரகாரத்தில் வேட்டி, சட்டை அணிந்து நடந்து சென்ற ரஜினி, சுவாமி தரிசனத்தின்போது சட்டை இன்றி அமர்ந்திருந்தார். பின் கோவிலின் தலைமை குருக்களிடம் ரஜினி ஆசீர்வாதம் பெற்றார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது. அப்போது கோவில் நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இமயமலையில் உள்ள பாபாஜி குகை அமைந்துள்ள பகுதியில் பாபாவை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் தங்குவதற்காக தியான மண்டபத்துடன் கூடிய விடுதி ஒன்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து ரஜினி கட்டியுள்ளார். இது சில தினங்களுக்கு முன்னர் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினியின் நண்பர்கள், “விரைவில் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலையில் உள்ள பாபாஜியை தரிசிக்க வரவுள்ளார்” என்று கூறியிருந்தனர். இந்நிலையில், தற்போது மந்த்ராலயம் ராகவேந்திரா கோவிலுக்கு திடீர் விசிட் அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் பிறந்தநாள் அன்று அவருடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய ஆன்மிகப் பயணங்கள் அனைவராலும் உற்று நோக்கப்படுகின்றன.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon