இலங்கை அணியுடனான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது
இந்திய, இலங்கை அணிகளுக்கிடையே தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 20) முடிவடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவருக்கு வரும் வியாழன் (நவம்பர் 23) அன்று திருமணம் நடைபெற உள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாகத் தமிழக வீரர் விஜய் சங்கர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுவருவதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க ஏ மற்றும் நியூசிலாந்து அணியுடனான போட்டிகளில் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஆல்ரவுண்டராகத் திகழ்ந்து வருகிறார். எனினும், புவனேஸ்வருக்குப் பதில், அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மாவே இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவனும் தனிப்பட்ட காரணங்களால் இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக முரளி விஜய் களமிறங்குவார். என எதிர்பார்க்கப்படுகிறது.