மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

விசாரிக்கப்படுவாரா சசிகலா?

விசாரிக்கப்படுவாரா  சசிகலா?

மின்னம்பலம்

ஜெயலலிதாவின் மரண மர்மத்தில் அவருடன் எப்போதும் உடனிருந்த சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டுமென தீபா கணவர் மாதவன் விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் நிபந்தனையை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் மரணத்தின் மர்மத்தை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி நாளை முதல் முறைப்படி தனது விசாரணையை துவங்க உள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் ஆணையத்தில் மனுவும் அளித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், நேற்று (நவம்பர் 20) தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்," ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரைப் பார்க்கத் தற்போதைய துணை குடியரசுத் தலைவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் வந்தனர். அனைவரையும் ஜெயலலிதாவை பார்க்க விடமால் தடுத்தது யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் அதில்," ஜெயலலிதா இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்த நிலையில், அந்த பாதுகாவலர்களையும் விசாரணை செய்ய வேண்டும். அதுபோன்றே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, உள்பட அனைவரையும் மருத்துவப் புலனாய்வுத்துறையில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களைக் கொண்டு விசாரணைக்குள் கொண்டு வர வேண்டும்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருக்கும் சிசிடிவி காட்சிகள் குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ள அவர், ஜெயலலிதாவுடன் உடனிருந்த சசிகலா உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பிரமாணப் பத்திரத்தில் மொத்தம் 19 சந்தேகங்கள் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் மரணம் தொடர்பான தகவல்கள் அளிப்பது முடிந்து நாளை முதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் முறைப்படி விசாரணை தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் எப்போதும் உடனிருந்த சசிகலா தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், சிறையிலுள்ள சசிகலாவை விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அப்படி விசாரிக்கப்பட்டால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ தங்கள் வசம் உள்ளது என்று தினகரன் கூறியிருப்பது குறித்தும் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon