மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

மருத்துவர்களின் ஆயுள்காலம் குறைவு: அதிர்ச்சி தகவல்!

மருத்துவர்களின் ஆயுள்காலம் குறைவு: அதிர்ச்சி தகவல்!

மருத்துவமனைப் படுக்கையில் இருப்பவர்களுக்கு டாக்டர்கள்தான் கடவுள். நோயாளிகளை இறப்பின் விளிம்பிலிருந்து காப்பாற்றி கொண்டுவந்த பின் "சாமி மாறி வந்து காப்பாத்துனிங்க", "நீங்க எங்களுக்குக் கடவுள்", "நீங்க நல்லா இருக்கனும்" அப்படின்னு நோயாளின் உறவினர்கள் வாழ்த்து வாங்க. சாதாரண மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க மருத்துவர்கள்தான் உதவுகிறார்கள். ஆனால் அந்த மருத்துவர்களே பொதுமக்களை விட 10 வருடங்கள் முன்னதாகவே இறந்து போகிறார்கள் என்பதுதான் தற்போதைய அதிர்ச்சித் தகவல். இந்திய மெடிக்கல் அசோசியேசன் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 67.9 வயது. இந்தியர்களை விட டாக்டர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து போகிறார்கள். கேரள மக்களின் சராசரி ஆயுள் காலம் 74.9. ஆனால், கேரள மருத்துவர்களின் சராசரி ஆயுள் 61.75 வயதுதான். பெரும்பாலான மருத்துவர்கள் இதயநோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். இது வருத்தத்திற்குரிய செய்தி.

இதுகுறித்து ஆய்வு நடத்திய இந்திய மெடிக்கல் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் கே.பி. விநாயகன் கூறுகையில், ''டாக்டர்களுக்கு தங்கள் உடலுக்கு எது நல்லது, எது உகந்தது என்று நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், சாதாரண மனிதர்களை விட 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே பல டாக்டர்கள் இறப்பது அதிர்ச்சியளிக்கிறது'' என்றார்.

மருத்துவர் இறப்பு தகவல் (Physician's Mortality Data) என்ற தலைப்பில் 2007 முதல் 2017ம் ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய மெடிக்கல் அசோசியேசனில் உறுப்பினர்களாக உள்ள டாக்டர்களில் 282 பேர் இந்தக் காலகட்டத்தில் இறந்துள்ளனர். அவர்களில் 83 சதகிவிதம் பேர் ஆண்கள். 13 சதவிகிதம் பேர் பெண்கள். 27 சதவிகிதம் பேர் இதயநோயால் மரணம் அடைந்துள்ளனர். 25 சதவிகிதம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். 2 சதவிகிதம் பேர் இன்ஃபெக்ஷன் காரணமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சதவீதத்தினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். டாக்டர்கள் இளவயதிலேயே மரணம் அடைவதற்கு முறையான காரணம் தெரியவில்லை. எனினும், அதிகப்படியான ஸ்ட்ரெஸ் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஐ.எம்.ஏ முன்னாள் தலைவர் வி.ஜி. பிரதீப் குமார் கூறுகையில், ''டாக்டர்கள் அதிகப்படியான மன உளைச்சலுக்கிடையே பணிபுரிகின்றார்கள். அரசுத்துறை, தனியார் துறைகளில் டாக்டர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை மற்றும் அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பணி நேரமும் அதிகம். எப்போதும் நோயாளிகளுடன் இருக்கும் சூழல். தங்களைப் புத்துணர்ச்சிக்குள்ளாகிக் கொள்ளும் எந்த விஷயத்திலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. மேலும் டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் வைக்கும் அதிகப்படியான நம்பிக்கையும் அவர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. டாக்டர்களின் பணி நேரமும் குறைக்கப்பட வேண்டும்'' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய மெடிக்கல் அசோசியேசன் தலைவர் கே.கே. அகர்வால், ''தற்போது, டாக்டராக இருப்பதே உடல் நலத்துக்குக் கேடு என்றே சொல்ல வேண்டும். அதிகப்படியான மனஉளைச்சல் காரணமாக இதயநோய், சர்க்கரை நோய், சில சமயங்களில் பக்கவாதம் கூட அவர்களை எளிதாகத் தாக்குகிறது'' என வேதனைப்படுகிறார்.

தற்போது டாக்டர்களின் உணவுமுறை, வாழும் சூழலில் அதிக அக்கறை காட்ட மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் அடிக்கடி தங்களை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்று ஐ.எம்.ஏ கேரளப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இந்திய மெடிக்கல் அசோசியேசன், நோயுற்ற டாக்டர்களுக்கு உதவி செய்யும் வகையில், contributory supportive scheme என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இறந்துபோன மருத்துவர்களின் குடும்பத்துக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon