மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 26 பிப் 2021

திருமணத்திற்குப் பெண் தேடும் ஆர்யா

திருமணத்திற்குப் பெண் தேடும் ஆர்யா

மின்னம்பலம்

விளம்பரத்தில் வருவதுபோல நான் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை என்று நினைத்தால் உடனே கால் செய்யவும் என்று தனக்கான வாழ்கைத் துணையைத் தேடும் வேட்டையில் மும்முரமாக இறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆர்யா. அவருடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளோடு சேர்த்து இவரை பற்றி அவ்வப்போது கிசுகிசு கிளம்புவதுண்டு. இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதில் “அடுத்த வருஷம் ஏப்ரல் மாசம் பேப்பர்ல மணமகள் தேவைன்னு விளம்பரம் கொடுக்கலாம்னு இருக்கேன்” என ஆர்யா சொல்வது போல் அந்த வீடியோ பதிவாகி இருந்தது.

அந்த வீடியோவில் அவரது நண்பர் ஒருவர் ஆர்யாவிடம், “நீ லவ் பண்ற பொண்ணுங்கள்ல யாராச்சும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமே” எனக் கேட்க, அதற்கு, “லவ் பண்ற பொண்ணுங்க எதுவும் செட்டாகலயே மச்சான்! நான் என்ன, வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்” என ஆர்யா பதிலளித்திருந்தார். திருமணம் பற்றி ஆர்யா தனது நண்பருடன் பேசியுள்ள இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வலம் வர தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஆர்யா தன் ட்விட்டர்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “என் நண்பர்கள் விளையாட்டுத்தனமாக நான் திருமணம் பற்றிப் பேசிய வீடியோவை வெளியிட்டனர். ஆனால் நான் உண்மையாகவே எனக்கு ஏற்ற பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. நான் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையாக இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் 73301 73301 இந்த எண்ணிற்கு போன் செய்யுங்கள். இது விளையாட்டாகச் செய்யும் விஷயம் அல்ல. இது என் வாழ்க்கை பிரச்சினை. நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon