மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 7

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 7

தமயந்தி

சபேசன் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்துப் பையன். பெண்களைப் பற்றி அவனுக்குப் பெரிதாக நல்ல அபிப்பிராயங்கள் கிடையாது. தனது பத்தொன்பது வயதில் முதன்முறையாக நண்பர்களுடன் குடிக்க ஆரம்பிக்கிறான் சபேசன். ஆச்சாரமான வீட்டு சூழலில் அடக்கி வைக்கப்பட்ட உடலியல் இச்சைகள் குடித்த பிறகு பாலியல் உரையாடலாக மாறும். தங்களது பாலியல் சாகசங்களை, எத்தனை பெண்களை தங்களால் அந்தந்த வாரம் உடலுறவு கொள்ள முடிந்தது போன்ற பொய்யான கணக்குகளைப் பகிர்ந்துகொள்ளும் தருணமாக, தங்கள் ஆண்மையை சமூகத்திற்குப் பறைசாற்றும் தருணங்களாக மாறின.

அவர்கள் குடித்துவிட்டுப் பேசும்போது பெண்களில் பலர் மோசமானவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். ஆசிரியர்களாக இருக்கும் பெண்கள், +2 போல் படிக்கும் விடலை மாணவர்களுடன் உறவு கொள்வார்கள். இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் மோசமானவர்கள். சத்தமா சிரிச்சி பேசும் பெண்கள் மோசம். அதே போல் பெண்களுக்கு வாரம் இருமுறை உடலுறவை கணவன் “கொடுத்து”விட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேறு ஆண்களிடம் அதைத் தேடுவார்கள் போன்ற மாயைகளை நிஜமென நம்புகிறான் அவன்.

கல்யாண வயது வந்து விட்டதாய் அவன் வேலைக்கு வந்தவுடன் அவர்கள் குடும்பத்தில் தீர்மானித்து அவனுக்குப் பெண் பார்க்க அவன் பார்க்க சென்றது தான் சத்யா. சத்யா ஒரு பள்ளி ஆசிரியர். நிச்சயதார்த்திற்கு பிறகு அவள் வேலையை விட்டு விட வேண்டும் என்று அவளிடம் அவன் சொல்ல அவள் ஆசிரியர் வேலை தன் கனவென அவனிடம் சொல்லி தனக்கு சாதகமாய் அவனை மவுனம் காக்க வைக்கிறாள்.

கல்யாணம் ஆகிறது. அவள் இப்போது +2 ஆசிரியராகப் பணி உயர்வு பெறுகிறாள். மாணவர்கள் வீட்டுக்குப் படிக்க வருகிறார்கள். சபேசனின் தீர்மானங்களின் படி அப்படிப்பட்ட விடலை மாணவர்கள் ஆசிரியருடன் உறவு வைத்துக் கொள்ளத் துடிப்பார்கள். ஒருநாள் குடித்து விட்டு வந்து மாணவர்களை அடிக்கிறான் சபேசன்.

மெல்ல மெல்ல தினம் குடிக்க ஆரம்பிக்கிறான். இயல்பாகவே அதனால் அவனுக்கு உடலுறவில் நாட்டம் குறைகிறது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தன்னால் வாராந்தர உடலுறவு கடனை சத்யாவுக்கு கொடுக்க இயலாததால் மிகவும் மனம் வருந்துகிறான். அவள் வேறு ஆண்களிடம் சென்று விடுவாள் என்று நினைக்கிறான். சரியாக அப்போது தான் பேருந்தில் பள்ளிக்கு சென்று வர சிரமம் இருப்பதாக சொல்லும் சத்யா அவனிடம் இருசக்கர வாகனம் கேட்கிறாள். அவன் இடிந்து போகிறான்.

தீராத சந்தேகத்தால் மனநல ஆலோசனை இருவரும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் சித்திரவதை தான் சத்யாவிற்கு. ஒருகட்டத்தில் மனம் இழுத்த போக்கில் வீட்டுக்கு மோட்டார் சரி செய்ய வந்த ப்ளம்பருடன் உறவு ஏற்படுகிறது அவளுக்கு. ஒரு கட்டத்தில் ஒரு பிரச்னையில் சபேசன் காலில் விழுந்து தனக்கு ப்ளம்பருடன் இருந்த உறவை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறாள். ஆனால், அவன் அதையும் மன்னிப்பதாயில்லை.

அவனது புகாரே அவள் தனக்கு உண்மையாய் இல்லை என்பதும் தன்னை விட தகுதியில் குறைந்த ஒரு ப்ளம்பரோடு உறவு வைத்துக் கொண்டாள் என்பதும் அதற்கு அவர்கள் இருவருக்கும் தான் தண்டனை கொடுக்கவில்லை என்பதும் தான். தன்னிடம் என்ன குறை – குடிப்பழக்கத்தைத் தவிர என்பதே சபேசன் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வி.

குடிப்பழக்கத்திற்கும் குடிநோய்க்குமான வித்தியாசத்தை அவன் உண்ரவில்லை. தன் நோயே இத்தகைய சூழல்களை உருவாக்கிற்று என அவன் உணரவில்லை. அவனது பெண்கள் பற்றிய தட்டையான தீர்மானங்கள் அவனை ஒரு குடிநோயாளியாக மாற்றியிருக்கிறதென கூட உணரவில்லை அவன்.

பெண்களைப் பற்றிய அபிப்பிராயம் தானே. அது எப்படி வாழ்வை பாதிக்கும் என்று கேட்டால் சபேசனைத் தவிர வேறு பதில் இருக்க முடியாது. வாழ்வில் நாம் நமக்கே சமாதானப்படுத்தி வைத்திருக்கும் கோட்பாடுகளுக்கும் சமூகம் நம் மீது நிர்பந்தமாக சாத்தியிருக்கும் கோட்பாடுகளுக்கும் யதார்த்த நிஜங்களுக்கும் இடையிலான இடைவெளிகளே சமூக உறவு சிக்கல்களைஉருவாக்குகிறதென யாரும் அறிந்திருப்பதில்லை, அதனாலேயே, மேலும் மேலும் அதை நோக்கி நகரும் போது இத்தகைய உச்சநிலை பேதங்கள் தோன்றுகின்றன.

குடிநோயாளிகள் பற்றி சமீபத்தில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை மனநல ஆலோசகர்கள் சுனில் / ஜெயசுதாவிடம் பேசிக் கொண்டிருந்த போது தெரிந்து கொண்டேன். அது சாதாரணமாக குடிக்கும் மூன்று பேரில் ஒருவர் குடிநோயாளி ஆகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதென்பது தான். அடுத்த முறை எப்போது இப்படி குடிக்கலாம் என்று குடிக்கும் போதே நினைக்க நேரிடுவதே குடிநோயின் முதல் அறிகுறி.

பிறகு, குடிப்பதற்கான காரணங்களை கண்டுப்பிடித்து குடிக்க ஆரம்பிப்பார்கள். அது மிக அடிக்கடி குடிப்பொழுதுகள் அமையுமாறு பார்த்துக் கொள்ளும் மனோபாவம் உருவாகும். ஒருகட்டத்தில் குடி அவனை விழுங்கப் பார்க்க அவன் சபரிமலைக்கு மாலை போடுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு குடியை விட்டு குடியின் பிடியில் தான் இல்லை என்பது போன்ற சுயவிளக்கங்களை மேற்கொள்ள முனைவான். ரத்தத்தில் கலக்கும் மதுவின் வேதியியல் சிக்கல் மூளையைத் தாக்க ஆரம்பிக்கும். பின்னே உடல் தனக்கு குடி வேண்டாம் என்று சொன்னாலும் மூளை தனக்கு போதை வேண்டும் என்று கட்டளையிடும். போதை ஒருகட்டத்தில் எல்லா விஷயங்களுக்கும் சவுகர்யமாக ஆகி விடும். ஒன்று மனதின் துயரங்கள் மறந்து போகும். அடுத்தது வெளிப்படையாய் எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் மனதில் உள்ளவற்றை தைரியமாக சொல்ல முடியும்.

இன்றும் சபேசன் ஒரு மனநலம் பாதித்த குடி நோயாளி தான். டீ-டாக்சிக் என சொல்லப்படும் போதை விஷயங்களை ரத்தத்திலிருந்து களையும் வித்தையை மருத்துவ ரீதியாய் செய்தாலும் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்தி செயல்படுத்த சிகிச்சையும் ஆலோசனையும் தேவை. சத்யாவை நான் சந்திக்கவில்லை. ஆனால், அவள் முகமும் குரலுமாகவே இக்கட்டுரையை இந்த நொடி மனசெங்கும் பரவிக் கிடக்கிறது.

ஒருவேளை , நம்மில் பலர் ஏதோ ஒரு தருணத்து சத்யாக்கள் தானோ?!

மீண்டும் சந்திப்போம்... அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை!

தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் - மைண்ட் ஜோன் மருத்துவமனை

எழுத்தாக்கம்: தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

படங்கள்: கூகுள் இமேஜ்

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி!

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 2

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 3

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 4

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி -6

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon