மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

மாறன் சகோதரர்கள் வழக்கு ஒத்திவைப்பு!

மாறன் சகோதரர்கள் வழக்கு ஒத்திவைப்பு!

கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிரான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கின் விசாரணை டிச. 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைப்பேசி இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அவர்மீது சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படவிருந்த நிலையில், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமெனக் குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நவ. 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களில் தங்கள் தரப்பில் ஆய்வு செய்து விளக்கமளிக்க மூன்று வாரக் கால அவகாசம் வேண்டுமென மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி நடராஜன் 10 நாட்கள் அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

அதன்படி, இன்று (நவ.21 ) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் ஆஜராகவில்லை. மேலும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோருவது குறித்து வாதாட இருப்பதால் அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிச. 11ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon