மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் முதல்வரின் வருகைக்காகப் புதியபாலத்தை அடைத்ததால் பழைய பாலத்தில் இரு தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 15 கல்லூரி மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இரண்டு ஆற்றுப்பாலம் உள்ளது. இதில் ஒன்று பழைய பாலம். மற்றொன்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் ஏரல் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் பழைய பாலம் வழியாகத் திருச்செந்தூர் சாலையிலும், திருச்செந்தூரிலிருந்து வரும் வாகனங்கள் புதிய பாலம் வழியாக தூத்துக்குடி மற்றும் ஏரல் பகுதிகளுக்கு செல்லும்வகையில் போக்குவரத்து அமைக்கப்பட்டு எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.

இந்நிலையில், நாளை (நவம்பர் 21) தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். அதற்காக, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கார்கள் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்வதற்கும் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்வதற்கும் வசதியாக இந்தப் புதிய பாலம் வழியாகச் செல்லும் திட்டம் உள்ளது. இதனால், புதிய பாலத்தின் ஓரங்களில் கறுப்பு-வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணிக்காக இன்று(நவம்பர் 21) காலை பேரிகார்டுகள் வைத்து பாலத்துக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய பாலம் வழியாகவே வாகனங்கள் வந்து சென்றுகொண்டிருந்தன. இதனால், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற தனியார் கல்லூரிப் பேருந்தும் ஆத்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற தனியார் கல்லூரிப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த 15 மாணவிகள் காயம் அடைந்தனர்.

ஆத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாலத்தில் கறுப்பு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணியை இரவோடு இரவாகச் செய்திருக்கலாம் அல்லது பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தாலும் பணி நடக்கும் ஓரங்களில் மட்டும் தடுப்புகள் அமைத்திருக்கலாம். பழைய பாலத்தில் இருபுறமும் அறிவிப்பு பலகையாவது வைத்திருக்கலாம். முன்னறிவிப்பு இல்லாததும் அலட்சியமுமே விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon