மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

தலைமையின்றி தடுமாறும் அண்ணா பல்கலைக்கழகம்!

தலைமையின்றி தடுமாறும் அண்ணா பல்கலைக்கழகம்!

’அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஓய்வுபெற்று 18 மாதங்களாகியும், அந்த பதவி நிரப்பப்படாமல் இருப்பது பற்றி தமிழக ஆட்சியாளர்களுக்கு எவ்வித குற்றஉணர்வுமில்லை’ என்றிருக்கிறார் ராமதாஸ்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மே 26ம் தேதி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் இராஜாராம் ஓய்வுபெற்றார். ’அதன்பிறகு தமிழகத்தின் முதலமைச்சர்களாக 3 பேர் மாறிவிட்டனர். ஆனாலும், பல்கலைக்கழகத்திற்கு ஒரு துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை’ என்றிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். ”அப்பதவிக்கு தகுதியான பேராசிரியர்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளனர். ஆனால், துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் ஊழல் தான், நேர்மையானவர்கள் அப்பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, இன்று (நவம்பர் 21) அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ”அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரைத்த பெயர்களை ஆளுனர் நிராகரித்தார். அதன்பின்னர் 6 மாதங்களாகி விட்ட நிலையில் இன்னும் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி வளர்ச்சிப்பணிகள் தேங்கிக் கிடக்கின்றன.

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது. இத்தகைய தருணங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வசதியாக துணைவேந்தர் இருக்க வேண்டியது அவசியமாகும். துணைவேந்தர் பதவி ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருக்கும் நிலையில், பதிவாளரின் பதவிக்காலமும் முடிவடைந்து விட்டதால், அண்ணா பல்கலைக்கழகம் தலைமையின்றி தடுமாறுகிறது.

’இனிவரும் காலங்களில் துணைவேந்தர்கள் ஓய்வுபெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாகவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்படும்’ என்று அமைச்சர் அறிவித்திருந்தார். தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, கான்பூர் ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குனர் அனந்தபத்மநாபன் ஆகியோர் பதவி விலகியதால், இப்போது ஒற்றை உறுப்பினர் மட்டுமே உள்ளார். புதிய உறுப்பினர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தாலும், இன்னும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

அண்ணா பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு மிகப்பெரிய விலை நிர்ணயிக்கப்பட்டு, அது தொடர்பாக பேரம் நடைபெற்று வருவதுதான் தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இப்போது நடப்பது எதுவுமே நல்லதாகத் தெரியவில்லை” என்று அறிக்கையில் கூறியிருக்கிறார் ராமதாஸ்.

’திறமையான, தகுதி வாய்ந்த, நேர்மையான ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்ய, உடனடியாக புதிய தேர்வுக்குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon