வடகொரியாவை மீண்டும் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
வடகொரியாவுக்கும். தென்கொரியாவுக்கும் இடையிலான மோதல்போக்கு வடகொரியாவை அணு ஆயுத நாடாக உருவாக்கியுள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இருநாடுகளுக்குமான அணுகுமுறை போரை ஏற்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து முரணால் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவையும் அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே வரவேற்றுள்ளார். வடகொரியாவிடம் வெறும் 60 அணு ஆயுதங்கள் மட்டும்தான் உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை ஜூலையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. அப்போது அமெரிக்கா 6,800 அணு ஆயுதங்கள் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.