மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஜிஎஸ்டி: ரூ.95,131 கோடி வரி வசூல்!

ஜிஎஸ்டி: ரூ.95,131 கோடி வரி வசூல்!

கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.95,131 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுத் தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசால் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறை அமலான முதல் மாதமே மத்திய அரசு எதிர்பார்த்த தொகையை விடக் கூடுதலாக வரி வசூலானது. அதாவது ஜூலை மாதத்தில் ரூ.92,283 கோடி வசூலானது. அதைத் தொடர்ந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.90,669 கோடியும், செப்டம்பர் மாதத்தில் ரூ.93,141 கோடியும் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் 2.1 சதவிகித உயர்வுடன் ரூ.95,131 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத் துணை முதல்வரும் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷில் மோடி கூறுகையில், “வரி வசூல் அதிகரித்திருப்பதால் ஜிஎஸ்டியில் ஏற்பட்ட தாக்கம் சீராகி வருவதைக் காண முடிகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு அரசானது கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மாநிலங்களுக்கான வருவாய் இழப்பும் குறைந்து 17.6 சதவிகிதமாக (ரூ.7,560 கோடி) மட்டுமே உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மாநிலங்களுக்கான இழப்பு 28.4 சதவிகிதமாக (ரூ.12,208 கோடி) இருந்தது. ஜூலை மாதத்தில் நிலுவையில் இருந்த வரித் தாக்கல் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளது” என்றார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon