மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

அரசை நம்பாமல் களத்தில் இறங்கிய இளைஞர்கள்!

அரசை நம்பாமல் களத்தில் இறங்கிய இளைஞர்கள்!

விழுப்புரத்தில் சேதமடைந்த தார்ச் சாலையை இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கிராவல் மண் அடித்துச் சீரமைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கத்தில் ரயில்வே தரைப்பாலம் தொடங்கி, திரெளபதியம்மன் கோயில் வரையிலான சண்முகப் பெருமான் சாலை, முக்கிய கடை வீதியாகவும், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரப் பயன்படுத்தப்படும் பிரதான பாதையாகவும் உள்ளது.

கடந்த சில மாதங்களாக விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்றபோது, விழுப்புரம் புதுச்சேரி சாலைக்கு மாற்றுச் சாலையாக இந்தச் சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், இந்தச் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமானது. மேலும், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையிலும், தொடர் மழை காரணமாக சாலையில் நீர் தேங்கி, கடுமையாகச் சேதமானது.

இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று, அப்பகுதியில் இயங்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் பொதுநல இளைஞர் அமைப்பினர், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் கோரிக்கைக்கு பலன் கிடைக்காததையடுத்து, நீண்ட நாள்களாகப் புதுப்பிக்கப்படாத ஒரு கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையை சீரமைக்கும் பணியில் "யாதும் ஊரே யாவரும் கேளீர்' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் களமிறங்கினர்.

அவர்கள் தங்களது சொந்த செலவில் லாரிகள் மூலம் கிராவல் மண் கொண்டு வந்து சாலையில் கொட்டினர். கொட்டிய கிராவல் மண்ணை, தார்ச்சாலை பள்ளங்களில் பரப்பி, சாலையைச் சீரமைத்தனர். மேலும், இந்த தார்ச்சாலையை புதுப்பித்துச் சீரமைக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் ஆட்சியருக்குக் கோரிக்கையும் விடுத்தனர். இளைஞர்கள் மேற்கொண்ட இந்த நற்பணியை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon