மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 11 ஆக 2020

உலக மீனவர் தினம்: இலவச மீன் விருந்து!

உலக மீனவர் தினம்: இலவச மீன் விருந்து!

இன்று (நவம்பர் 21) உலக மீனவர்கள் தினம். அதனால் சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கு இலவசமாக மீன்களை வழங்கி அசத்தியுள்ளனர் மீனவர்கள்.

பா.ஜனதா மீனவர் அணி செயலாளர் சதீஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த மீன் விருந்து மற்றும் மீன் காட்சியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். சுமார் 20க்கும் மேற்பட்ட சாப்பாடு வகைகள், மீன் வறுவல்கள், தொக்குகள், வஞ்சிரம், தேங்காய் பாரை, இறால், நெத்திலி, கடல்வாத்து, தேந்தல், செருப்புமீன், பூங்குழல், ஊடான், கடல் வாத்து உள்ளிட்ட மீன் வறுவல்கள், இறா தொக்கு, சுறா மீனை வேக வைத்து முள்ளை நீக்கி உதிர்த்து அதன் பிறகு தேங்காய், மிளகு போட்டு செய்த புட்டு ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது,” அனைத்து மீனவர்களுக்கும் உலக மீனவர் தின வாழ்த்தை தெரிவித்தார். பின்பு ஆளுநரின் களப்பணியை மக்கள் ஆதரிப்பதாகவும், இந்தப் பணி பலம் அளிக்குமே தவிர பலவீனமாகாது” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதீஸ் கூறும்போது, “தொடர்ந்து 10 ஆண்டுகளாக மீன் விருந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த முறை பெரிய அளவில் நடந்ததில் மிக்க மகிழ்ச்சி எனத்” தெரிவித்தார்.

இது குறித்து மீனவர்கள் கூறும்போது, “ஆண்டு முழுவதும் மீனை விலைக்கு வாங்கி எங்களின் வாழ்வாதாரத்துக்குத் துணை நிற்கும் பொதுமக்களுக்கு எங்களின் தினமான இன்று சிறிதளவு மீனை இலவசமாகப் பரிசளிப்பது மகிழ்ச்சி” என்றனர் மீனவர்கள்.

இந்நிகழ்ச்சியில் கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், எம்.என்.ராஜா, காளிதாஸ், கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், செம்மலர் சேகர் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon