மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள்!

தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள்!

மணல் விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணலை இறக்குமதி செய்த நிறுவனம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதையடுத்து மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கடந்த 16ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 21) மணல் விற்பனையை முறைப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை, நாகை, அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்களும், எஸ்.பி.க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மணல் விற்பனையை முறைபடுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், புதிதாக 70 மணல் குவாரிகள் தொடங்குவது உள்பட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மணல் விலையைக் குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்," புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று" தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon