மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

சட்டவிரோதமாக பார்க்கிங் : புகைப்படம் எடுப்பவர்களுக்குப் பரிசு!

சட்டவிரோதமாக பார்க்கிங் : புகைப்படம் எடுப்பவர்களுக்குப் பரிசு!

டெல்லி சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துபவர்களைப் புகைப்படம் எடுத்து அளிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று (நவம்பர் 21) அறிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி,“நாடாளுமன்ற வளாகத்தில் பார்க்கிங் வசதி இல்லாதது ஒவ்வொரு நாளும் எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. பல வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் போது, வாகனங்களை நிறுத்துவதில் நெரிசல் ஏற்படும். தற்சமயம் 9 கோடி ரூபாய் செலவில் புதிய வாகன நிறுத்துமிடத்தைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அனுமதியைப் பெற 2016 மே மாதம் முதல் காத்திருந்தேன். 9 மாதங்களுக்கு பிறகே இந்த அனுமதி கிடைத்தது. புதிய வாகன நிறுத்துமிடத்தைக் கட்டுவதற்காக எனக்கு 13 அனுமதிகள் தேவைப்பட்டன.

என்னுடைய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய விதிமுறையை இணைக்கப் போகிறேன். அதன்படி சட்டவிரோதமாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைப் புகைப்படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கோ அல்லது போலீசிற்கு அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத்திலிருந்து 10% சன்மானமாக வழங்கப்படும். 500 ரூபாய் அபராதம் என்றால் புகைப்படம் எடுத்து அனுப்பியவருக்கு 50 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

சாலைகளில் சட்ட விரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தாலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். சாலை மக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அதில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு எனத் தனி பார்க்கிங் வசதி வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நிதின் கட்காரி தற்போது கட்டி வரும் பார்க்கிங் இடம் 314 சதுர மீட்டர் பரப்பளவும், 22 மீட்டர் உயரமும் கொண்டது. கீழ்த் தளம் உட்பட மொத்தமாக 7 மாடிகளைக் கொண்டது. இதில் சுமார் 112 கார்களை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon