மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

பிரதியுமான் வழக்கு : நடத்துனருக்கு ஜாமீன்!

பிரதியுமான் வழக்கு : நடத்துனருக்கு ஜாமீன்!

ரியான் சர்வதேச பள்ளி மாணவன் பிரதியுமான் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடத்துனர் அசோக்குமாருக்கு ஜாமீன் வழங்கி குருகிராம் நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) உத்தரவிட்டுள்ளது.

குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவன் பிரதியுமான் தாக்கூர் கடந்த செப்டம்பர் 8 அன்று பள்ளி கழிவறையில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி பள்ளி பேருந்து நடத்துனர் அசோக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. சிறுவன் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. மேலும் அதே பள்ளியை சேர்ந்த பதினொராம் வகுப்பு மாணவரை நவம்பர் 8 அன்று சிபிஐ கைது செய்தது. அந்த மாணவரும் தேர்வை ஒத்தி வைப்பதற்காகச் சிறுவனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நடத்துனர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அசோக்குமாரை காவல்துறையினர் துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி குருகிராம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். .

இந்த வழக்கு இன்று (நவம்பர் 21) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அசோக்குமார் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் 21 ஆம் பிரிவின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon