மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

சத்துணவில் முட்டை : ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்!

சத்துணவில் முட்டை : ஸ்டாலினுக்கு அமைச்சர்  பதில்!

சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கப்படவில்லை என்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், முட்டை விலையேற்றத்தின் காரணமாக சில நாட்களாக முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று ( நவம்பர் 20) வெளியிட்டிருந்த அறிக்கையில்,"சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையை கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் காரணமாக சத்துணவு மையங்களில் முட்டைகள் வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும், “முட்டை விலை அதிகமாகி விட்டது”, என்று காரணம் காட்டி முட்டைகள் கொள்முதலை நிறுத்தி, சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவது வேதனையானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர்," உடனடியாக போதிய முட்டைகளை கொள்முதல் செய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். இதுபோலவே பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடந்து ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, இன்று ( நவம்பர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனைத்து அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்களில் எவ்வித தடையுமின்றி முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிச்சந்தையில் ஏற்பட்ட முட்டை விலை உயர்வினால் , சத்துணவு திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது, எனவே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சத்துணவிற்காக கொள்முதல் செய்யப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முட்டைகளின் மேல் எட்டு வண்ணங்களில் முத்திரை பதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட முட்டை ஒப்பந்தக் கொள்முதல் நடைமுறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon