மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

விரைவில் முத்தலாக் தடை சட்டம்!

விரைவில் முத்தலாக் தடை சட்டம்!

முத்தலாக் முறைக்குத் தடை விதிக்கும் சட்டத்தை குளிர்காலக்கூட்ட தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலாக் என்று மூன்று முறை கூறி மனைவியை விவகாரத்துச் செய்யும் வழக்கம் இஸ்லாமிய சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. இதனால் பெண்கள் பாதிக்கப்படுவதாகப் பல தரப்பினரும் கூறிவந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, முத்தலாக் முறை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதிகள் கேஹர் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முறைக்குத் தடை விதிப்பதற்கு எதிராக இருந்தனர். அதேவேளையில், நரிமன், குரியன் மற்றும் லலித் ஆகியோர் முத்தலாக் முறை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தனர். ஐந்து நீதிபதிகளில் 3 பேர் முத்தலாக் முறைக்கு எதிராக இருந்ததால் முத்தலாக் முறைக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அடுத்த 6 மாதங்களுக்கு முத்தலாக் முறையைச் செயல்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் விவகாரத்தில் உரியச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு சட்டம் இயற்றும்போது இஸ்லாமிய மக்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இந்நிலையில், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் முத்தலாக் முறைக்குத் தடை விதிக்கும் சட்ட முன்வரைவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon