பார்கவி. பார்க்க மிக அமைதியாக இருந்தாள். இரண்டு கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அவளின் மவுனத்திற்கும் வார்த்தைக்கும் இடையில் குற்றவுணர்வு ஒளிந்திருந்தது. அது கணவன் அல்லாத வேறு ஆணோடு அவளுக்கு இருந்த உறவு சம்பந்தப்பட்டது அந்தக் குற்றவுணர்வு.
பார்கவிக்கும் அசோகனுக்கும் கல்யாணமானதிலிருந்தே அவர்களிடையில் சரியான இணக்கமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனது குடிப்பழக்கம் தான். ஆரம்பத்தில் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தவன் பின் அதிகமாக அதற்கு அடிமையானான். அது எங்கு எதிரொலித்தது என்றால் அவனது தாம்பத்ய வாழ்வில் எதிரொலித்தது. அவனால் அவளை திருப்திப்படுத்த இயலவில்லை. சில போதை பொருட்களையும் அசோகன் உட்கொள்வது உண்டு. குடியின் மிகக் கொடிய தாக்கம் இதுவாகவே பெரும்பாலும் இருக்கிறது. அவ்வளவாக உரையாடப்படாத பகுதியாகவும் உள்ளது.
பார்கவி அதை சமன்படுத்தும் முயற்சிகளை எடுப்பாள். அவளாகவே அவனுக்கு அழைப்பு விடுத்தும் அவனால் அவளை எந்தநிலையிலும் திருப்திப்படுத்த இயலவில்லை. அதை சமாளிக்கும் பொருட்டு அவன் அவளை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி நடந்து கொள்வதுண்டு. அதனாலேயே தனக்குள்ளாகவே அவள் தனது பாலியல் வேட்கையை மறைத்து வைத்துக் கொண்டிருந்தாள். பதிமூன்று வருடங்கள். இடையில் ஒரு குழந்தையும் வேறு.
பின் மெல்ல மெல்ல அது எதிர் தெரு நபருடனான உறவாய் மாறிற்று. முதல் முறையாக அவளது பாலியியல் வறட்சியில் மழை பெய்தது. முதல் ஆறுமாதங்கள் அதை முழுமனதாக அனுபவித்தாள். ஆனால், அதற்குப் பிறகாக அவள் அதை குற்றமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அவ்வூரிலிருந்து வெளிவர வேண்டுமென விரும்பினாள். குற்றவுணர்வே அவளுக்கு மிக மோசமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் அலைப்பாய்கிறாள் பார்கவி.
பாலியியல் வேட்கை, அதில் இணைந்திருக்கும் குற்றவுணர்வு, அதை வேறு நபரிடம் தோன்றினால் ஏற்படும் கூடுதல் குற்றவுணர்வு எல்லாமே சமூகம் நமக்கு முன் ஏற்படுத்தியிருக்கும் ஏமாற்று வேலை தான். பல பெண்களால் தங்கள் பாலியியல் வேட்கையையோ பாலியியல் தேடலையோ இச்சமூகத்தில் வெளிப்படுத்தக் கூட முடியாது. கற்பு என்பதே அந்த ஏமாற்று வார்த்தையாக இருக்கிறது.
பார்கவி தயங்கி சொன்ன விஷயம் இதுதான். என்னுடைய பாலியல் தேவைகள் என் வாழ்வில் பூர்த்தி ஆனதேயில்லை. நம் கலாசாரத்தில் மிகுந்த பரப்பரப்பாக பேசப்படும் விஷயம் கற்பு. குறிப்பாக, பெண்களைப் பற்றி பேசும் போது இவ்விஷயத்தை மிக கவனமாக கையிலெடுப்பார்கள். கன்னித்தன்மை என்னும் வார்த்தை கற்பு அரசியலில் மிக நுட்பமான கூறுகள் கொண்ட ஒரு வார்த்தையாகும். கன்னித்திரை என்பது அவர்கள் கோட்பாடுகளில் ஒரு பெண்ணிற்கு கணவனால் மட்டுமே கத்தரிக்க வேண்டிய கத்திரிக்கோல்.
வாழ்வின் பெரும் சவால்களில் ஆனால் கன்னித் திரை என கூறப்படுவது பெண் சைக்கிள் ஓட்டினால் கூட கிழிந்து தான் போகும். என் தோழியின் முதலிரவில் உடலுறவுக்குப் பின் அவள் கணவன் போர்வையில் ரத்தம் தேடிய கதையை அவள் இன்னமும் உரக்க சொல்லி சிரிப்பாள். பெண்களை இதை முன்வைத்தே கற்புக்கரசி என்றும் வீட்டின் கன்னி தெய்வம் என்றெல்லாம் அடையாளப்படுத்தி கொண்டாடுகிறார்கள். பூஜை கூட செய்கிறார்கள். பல சாமியார்கள் பரிகாரமாய் கன்னித் தெய்வத்திற்கு படையல் வைங்க என்று சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்.
மருத்துவரீதியாகவே ஒரு பெண்ணை ஒரு ஆண் உடல்ரீதியாக அணுகுவது மற்றும் திருப்தியளிப்பது என்பது மிக சிரமமான விஷயம். ஒரு ஆணால் மூன்று நிமிடங்களுள் உச்சம் அடைய முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு உச்சநிலையை எட்டுவதென்பதற்கு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த ரீதியில் அணுகினோம் என்றால் பெரும்பாலான ஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியாது. அப்படி நேரும் போது பிற உறவுகளில் ஈடுபட நேர்கிறது. இதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருதரப்பிலும் நியாயங்களை வைக்கும் அளவிற்கே இவ்விஷயங்கள் குறித்த சமூக புரிதல் உள்ளது . இது துரதிஷ்டமே.
ஒரு ஆணால் இன்னொரு பெண்ணை வெகு சுலபமாக தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ள இயலும். ஆனால், ஒரு பெண்ணால் அது சுலபமாக இயலாது. அவளது தனிமையிலும் பெருமூச்சிலும் தான் அவளின் வெற்றிடங்கள் கரைந்து போகும். அந்நோன்யத்திற்கான பசி ( hunger for intimacy ) என்று அது அழைக்கப்படுகிறது. பைபிளில் பத்து கட்டளைகளில் பிறன் மனையை நினைக்காதே என்று இருக்கிறது. ஆனால், யதார்த்த வாழ்வில் அப்படியொரு சூழலை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு பக்கம் அப்படி முதன்மை உறவில் திருப்தியடையாத ஆணோ பெண்ணோ வேறு உறவுகளில் ஈடுபடுவது இயற்கையே. ஆனால், சமூக நிர்பந்தங்களினால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்குக் கூட ஒழுக்கவரையுறுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
பார்கவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்த சிகிச்சையே அவளை குற்றவுணர்விலிருந்து மீட்பதே ஆகும். முக்கியமாக புராண கதைகளில் ஆண்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை புரிய வைப்பதிலிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் அது. உடல் என்பது அருவெருப்பானது என்ற சமூகத்தின் பெரும் தீ ர்மானத்தை தொடர் உரையாடல்கள் மூலமே தீர்க்க முடியும். அல்லது தீர்வை நோக்கி நகர முடியும்.
விவாகரத்து செய்து கூட தனக்கு வேண்டிய வாழ்வை நம்மில் பலர் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், குழந்தைகள் பாதிக்கப்படுமே என்பதால் அதை செய்ய மறுக்கும் பலர் தங்கள் மன தாபங்களை, அந்நோன்யத்தை ரகசிய உறவுகளின் மூலம் தீர்த்துக் கொள்கின்றனர்.
சரி தவறு என்னும் துலாபாரம் அற்றதாகவே உறவு சிக்கல்கள் உள்ளன. பார்கவியைப் போல இன்றுபல ஆண்கள் பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களை பெரும் குற்றம் இழைத்ததாக இந்த சமூகம் பார்ப்பது தான் இந்த சமூகத்தின் பிழை. உடல் குறித்த புரிதல் என்பது ஏற்படும் வரை இந்த சிக்கல்களோடே தான் மனித இனம் நகரும். அச்சிக்கலை மனச்சிக்கலாக்கி அழுத்தங்கள் கொடுக்கும்.
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
மீண்டும் சந்திப்போம்... அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை!
தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் - மைண்ட் ஜோன் மருத்துவமனை
எழுத்தாக்கம்: தமயந்தி
ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.
படங்கள்:கூகுள் இமேஜ்
சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி!
சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 2
சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 3
சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 4
சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5