மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 அக் 2019

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 2

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 2

கேபிள் சங்கர்

‘ஃபைனான்ஸ் இல்லாமல் படமெடுக்கவே முடியாதா?’ என்று கேட்பீர்களானால், ‘ஏன் முடியாது’ என்று எதிர்க் கேள்வி கேட்கலாம். ஏனென்றால் புதுமுகங்களை வைத்து அல்லது ஓரிரு தெரிந்த முகங்களை வைத்து ரூ.1-3 கோடிக்குள் தயாரிக்கப்படும் அத்தனை படங்களும் சொந்தப் பணத்தையோ அல்லது நிலபுலன்களை அடமானம் வைத்தோதான் எடுக்கப்படுகின்றன. உண்மையைச் சொல்லப்போனால் நிஜமாகவே தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன்கள் இந்தப் புது தயாரிப்பாளர்கள்தான்.

புது தயாரிப்பாளர்கள் தற்போதெல்லாம் மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு மட்டும் வருவதில்லை. வெளிநாடுகளில் சம்பாதித்து வருகிறவர்கள், வீண் பெருமைக்காக வெளிநாடுகளில் தொழில் செய்யும் முனைவர்கள், கன்வர்ஷன் மணியில் இங்கே மீடியாவில் புகழ்பெற, மற்ற சிற்றின்பங்களைப் பெறப் படமெடுப்பவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், மீடியேட்டர்கள், பிரபலங்களின் பினாமிகள் எனப் பல விதங்களில் வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் நிச்சயமாகக் கடன் வாங்கிப் படமெடுப்பவர்கள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கதை, திரைக்கதை வசனமெழுதி இயக்குவதற்கு எப்படி ஒருவர் திறமையானவராக இருக்க வேண்டுமோ அதே அளவுக்குத் தயாரிப்பாளருக்கும் தயாரிப்பு தெரிந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கலைதான். முதல் படங்களில் ஏதும் தெரியாமல் இதுதான் சினிமாவோ என்று திக்கித் திணறியவர்கள் கடவுள் புண்ணியத்தில் அந்தப் படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து படமெடுத்து, கடைசிவரை தயாரிப்பு என்பது என்ன என்பதையே தெரியாதவராக வெளியேறியதுகூட நடந்திருக்கிறது.

எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர் ஆறு படங்கள் தயாரித்திருக்கிறார். இதுவரை ஒரு சினிமா எந்தெந்த நிலையில் என்னன்ன முறையில் உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றியோ, யார் யார் என்னென்ன வேலைகள் செய்வார்கள் என்பது பற்றியோ அவருக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. இப்படியானவர்கள் எத்தனை படமெடுத்தாலும் அது பஞ்சாயத்தில் போய்த்தான் முடியும்.

சரி, அப்படியானால் பிரபல தயாரிப்பாளர்கள் பலரும் ஃபைனான்ஸ் வாங்கித்தான் படமெடுப்பதாகச் சொல்கிறார்களே? ஆம்... பிரபல தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் ஃபைனான்ஸ் வாங்கித்தான் படமெடுக்கிறார்கள். சமீபத்தில் சிம்புவை வைத்து ‘ஏஏஏ’ எனும் படத்தை எடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தான் வீடு வாசலை எல்லாம் இழந்துவிட்டதாகச் சொல்லி பேசிய பேச்சையும் அறிக்கையையும் பார்த்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள். ஆரம்பத்தில் சின்னதாகப் படமெடுத்தவர். போகப் போக, கதை கேட்கப் போகும்போதுகூட நடிகர்கள் கால்ஷீட் இருந்தால் மட்டுமே படமெடுக்கலாம் என்று முடிவுக்கு வந்தவர். இத்தனைக்கும் அரசியல் பின்புலம், வியாபாரப் பின்புலமென பலமானவர்தான். எப்போது நடிகனை முன்வைத்துத் தயாரிப்பில் இறங்குகிறார்களோ அப்போதே படத்தின் மீதான அவருடய ஹோல்ட் போய்விடுகிறது. படத்தின் பட்ஜெட்டையும் ரிலீஸையும், வியாபாரத்தையும், படமெடுப்பதைப் பற்றியும் நடிகனே முடிவெடுக்கும் நிலை வந்துவிட்டது.

ஒரு புதிய தயாரிப்பாளர். சிறு முதலீட்டில் ஒரு படமெடுத்து நல்ல மார்க்கெட்டிங் மூலமாக வெற்றிப் படத்தை அளித்தவர். முதல் படத்தின் மூலம் கிடைத்த லாபம், நண்பர்களின் இன்வெஸ்ட்மெண்ட் என மீண்டும் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்தார். அதிலும் வெற்றி. தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களை எடுத்துச் சரியான முறையில் மார்க்கெட் செய்து தொடர் வெற்றி பெற, பண பலமிக்கவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒரு புராஜெக்ட் ஆரம்பிக்கும்போது தேவையான பணத்தைக் கொடுத்து ஃபர்ஸ்ட் காப்பியில் தயாரித்துத் தரச் சொல்லும் அளவுக்குப் பிரபலமானார் அந்தத் தயாரிப்பாளர்.

தொடர் வெற்றி என்பது எப்போதுமே சாத்தியமில்லாத ஒன்று. அது அவருக்கும் நடந்தது. சின்ன பட்ஜெட் படங்களில் வெற்றி பெற்றவர். தன் கை மீறிய பெரிய பட்ஜெட் படங்களுக்குப் போகும்போது சறுக்க ஆரம்பித்தார். உடனிருந்தவர்கள் பொறுத்தார்கள். தொடர்ந்து மிட் பட்ஜெட் படங்கள் கைகொடுக்காமல் போக, அடுத்தடுத்து வளர்த்த நடிகர், இயக்குநர்களை வைத்துப் படமெடுத்தார். அது பட்ஜெட் மீறிப் போய்விட்டது. படம் வியாபாரம் ஆகியும் மொத்தமாகக் கையைக் கடிக்க, நெருங்கியவர்கள் கை தூக்கிவிட்டார்கள். தற்போது படம் தயாரித்தே ஆக வேண்டும். இத்தனை நாள் பணம் இன்வெஸ்ட் செய்ய ஆளிருந்தார்கள். மீண்டும் சொந்தப் பணத்தில் படமெடுக்க வேண்டிய நிலை. ஓ.பி.எம்மில் படமெடுத்து பழகிப் போயிருக்க, சரியான முறையில் தயாரிப்பு தொழில் தெரிந்த தைரியத்தில் ஃபைனான்ஸ் வாங்கி படமெடுக்க ஆரம்பிக்கிறார். படம் வளர, அந்தப் படத்தைத் தாங்க, இன்னொரு மீடியம் பட்ஜெட் படத்தை ஆரம்பிக்கிறார்கள். எல்லாம் சரியானபடி நடந்திருந்தால் நிச்சயம் லாபம் வருகிறதோ இல்லையோ, நஷ்டம் வந்திருக்காது.

சினிமாவைப் பொறுத்தவரை எல்லா வியாபாரங்களும் நம்பிக்கையின் பேரில்தான் இயங்குகின்றன. நேற்றைக்கு விற்பனை ஆன ஒரு நடிகரின் புராஜக்ட் இன்றைக்கு ஆகாமல் நிற்கும். ஏன் என்று கேட்டால் அதற்கு பல காரணங்கள்.

எதிர்பார்த்த வியாபாரம் நடக்காததனால், வருமானமில்லாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலை உண்டாகி, கொஞ்சம் கொஞ்சமாக டைட் ஆகிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், இருக்கும்பட்சத்தில் வட்டிக்கு வட்டி போட்டோ அல்லது படம் நன்றாக வந்திருக்கும்பட்சத்தில், படத்தின் சாட்டிலைட் உரிமை, ஏரியா உரிமை என எதையாவது வாங்கி வைத்துக்கொண்டும் வட்டியைக் கழிக்கும் வழக்கம் உண்டு. சமீப காலமாக சாட்டிலைட் உரிமம் என்பது வெற்றி பெறும் படங்களுக்கு மட்டுமே என்றான பிறகு அதற்கும் உறுதியில்லாததால் திரிசங்கு நிலைதான்.

இப்படியான நிலையில் எப்படி ஃபைனான்ஸியர் தன் கடனை எடுப்பார்? தயாரிப்பாளர் வாங்கிய கடனைக் கொடுப்பார்?

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon