மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ஊழியர்களை வெளியேற்றும் வெரிசோன்!

ஊழியர்களை வெளியேற்றும் வெரிசோன்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் வெரிசோன் நிறுவனத்தின் ஒருபகுதியான Verizon Data Services India தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு இந்தியாவின் ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 7,000 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வெளியேற்ற வெரிசோன் முடிவு செய்துள்ளதாக ஐடி (IT) மற்றும் ஐடிஇஎஸ் (ITES) ஊழியர்களின் சங்கம் (UNITE) தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கின், “வெரிசோன் நிறுவனத்தில் 7 முதல் 3 வரையிலான பிரிவில் உள்ள 993 ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் (டிசம்பர் 12) மூத்த ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பாதுகாவலர்களின் உதவியுடன் அவர்கள் அப்புறப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தொழிலாளர் ஆணையர் தலையிட்டு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நீக்குவதைத் தடுக்க வேண்டும் என ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெரிசோன் நிறுவன செய்தி தொடர்பாளர், “சர்வதேச சந்தையில் போட்டியிடவும், வெற்றி பெறவும் சில மாறுதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அந்த மாறுதல்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் பிரதிபலித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐடி ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் ஃபோர்ம் ஆஃப் ஐடி எம்ப்ளாய்ஸ் (FITE)யிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆம், இந்தத் தகவல் உண்மையானதுதான். சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ள தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் 1,000 பேரை வெளியேற்ற வெரிசோன் முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்பாடுகள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12ஆம் தேதி பணிக்கு வந்த ஊழியர்களை அவர்களின் இடத்துக்கே டெலிவரி மேனேஜர், செக்யூரிட்டி ஆகியோர் போய் அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு மாத ஊதியம் தருகிறோம். கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பிரச்சினை செய்யக் கூடாது என்பதற்காக வாசல் வரையில் செக்யூரிட்டி உடன் சென்றுள்ளார். முன்பின் அறிவிக்காமல், திடீரெனப் பணியிலிருந்து நீக்குவதால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் அச்சத்தில் உள்ளனர்” என்று நிலைமையை விளக்கினார்.

‘இது தொடர்பாக உங்கள் சங்கம் சார்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?’ என்று கேட்டபோது, “தொழிலாளர் ஆணையர், சி.எம். செல் ஆகியவற்றுக்குப் புகார் அனுப்பியுள்ளோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தொழிலாளர் ஆணையர் உறுதியளித்துள்ளார்” என்ற பதில் கிடைத்தது.

‘எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் இந்த முயற்சியைத் தொழிலாளர் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

வியாழன், 14 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon