மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1!

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1!

தொகுப்பு : தினேஷ்பாரதி

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் புத்தகக் காட்சியை முன்னிட்டு கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளனர். அத்தகைய கட்டுரைத் தொகுப்புகள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை- சு. தியடோர் பாஸ்கரன்

மனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்து பாறை ஓவியங்களாக தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற பயன்படு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது.

இமாலயத்திலிருந்து குமரிவரை இந்திய துணைகண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாயிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்து விட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலைநாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது.

நம் நாட்டு உயிரின பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு கூறான இருபத்தைந்து நாயினங்களை, அவைகளின் வரலாற்று, பண்பாட்டுப் பின்புலத்தில் நூலாசிரியர் பதிவு செய்கிறார். (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

எஸ். ராமகிருஷ்ணன்- 4 கட்டுரைத் தொகுப்புகள்

உலகை வாசிப்போம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. அவர்கள் தங்கள் படைப்புகளுக்கு எவ்விதமான எதிர்வினைகளைப் பெற்றார்கள். உலக இலக்கியத்தின் சாதனையாளர்கள் ஏன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார்கள் எனத் தனது பரந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் உலக இலக்கியம் குறித்துக் காத்திரமான 31 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

நாவலெனும் சிம்பொனி

கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும், தஸ்தாயெவ்ஸ்கியும் இன்றும் பேசப்படுகிறார்கள். தமிழ் நாவல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஆராயும் இந்த கட்டுரைகள் நாவல் எனும் வடிவம் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.

எழுத்தே வாழ்க்கை

எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துல அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சாவல்களை போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.

கடவுளின் நாக்கு

உலகின் முதற் கதைசொல்லி கடவுள் என்கிறார்கள் பழங்குடி மக்கள். கடவுளின் நாக்கு தான் முதல் கதையை சொல்லியது எனவும் நம்புகிறார்கள் கடவுள் இந்த உலகை புரிந்து கொள்ளவும் நினைவு வைத்துக் கொள்ளவும் உலகை கதைகளாக உருமாற்றி சொல்லத் துவங்கினார். `தி இந்து’வில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. (4 புத்தகங்களும் தேசாந்திரி பதிப்பகம்)

புனைவு என்னும் புதிர்- விமலாதித்த மாமல்லன்

‘புனைவு என்னும் புதிர்’ நூல் தமிழில் முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், படைப்பின் உள்கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. இக்கட்டுரைகள், தி இந்து நாளிதழில் தொடராக வெளியானவை. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

சிவந்த மண்- கே.என்.சிவராமன்

தமிழில் இதுபோன்ற ஒரு நூல் வருவது இதுதான் முதல்முறை மட்டுமல்ல, இதற்கு முன் வேறு எந்த தமிழ் வெகுஜன பத்திரிகையும் இப்படியொரு கனமான தொடரை வெளியிட்டதில்லை என்று சொல்லுமளவுக்கு உருவாகியிருக்கிறது சிவந்த மண். இப்புத்தகம் நேற்றைய வரலாற்றை பதிவு செய்யவில்லை. மாறாக நாளைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுவதற்கான தொடக்கநிலைக் கையேட்டை மக்கள் முன் சமர்பித்திருக்கிறது. (வெளியீடு: சூரியன் பதிப்பகம்)

மற்றமையை உற்றமையாக்கிட - வாசுகி பாஸ்கர்

முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை. அவற்றை படித்தாலும் பாதகமில்லை, அந்தளவுக்கு தொந்தரவற்றவை. ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.குறிப்பிட்ட பிரச்சினையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக் கூடியவை. இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க எழுமோ என வியப்பைத் தருவதாகவோ, இப்படி பார்ப்பதற்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும் படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச் செய்பவை. (வெளியீடு: வாசக சாலை பதிப்பகம்)

எதிர்ப்பும் வெறுப்பும்- பா.பிரபாகரன்

சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எதிராக பல்வேறு தளங்களில் நாம் இயங்க வேண்டிய தேவை உள்ளது. இந்துத்துவம், சாதி ஒழிப்பு, அம்பேத்கரியம் என்னும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இந்தியச் சமூகம் எதிர்கொள்கிற சமகாலப் பிரச்சினைகளை இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. (வெளியீடு: உயிர்மை பதிப்பகம்)

பழைய யானைக்கடை- இசை

நவீனத் தமிழ் படைப்பாளிகளில் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் கவிஞர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு அவர் உரைநடை இலக்கியத்தில் செலுத்தும் தீவிரம். சங்கப் பாடல்களினுள்ளும், நீதிநூல்களிடத்தும், தமிழின் ஒப்பற்ற காவியமான கம்ப இராமாயணத்திலும், தெய்வமாக்கவி பாரதியினிடத்தும், சிற்றிலக்கியங்களிலும், நவகவிதைப் புலத்திலும் நகை எனும் மெய்ப்பாடு தேடும் முயற்சி, இந்த நூல்.

இதுவரை மரபு வழிப் பேராசிரியர் எவரும் செலவு மேற்கொள்ளாத திக்கில் இசையின் இப்பயணம் சாலவும் நன்று. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

அந்தர மனிதர்கள்- வெ. நீலகண்டன்

மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறிய மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத்தின் சிறுபகுதிதான்.

பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்கள்... எல்லோருமே நம் பார்வையில் வாழ்பவர்கள் தான். தினமும் இவர்களை கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையிலும் இவர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன. இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில காட்சிகளை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கடத்தும். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது வாழ்க்கை பற்றிய உங்கள் கற்பிதங்கள் மாறவும் செய்யலாம். (வெளியீடு:சந்தியா பதிப்பகம்)

பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?- ஆர். அபிலாஷ்

பெண்களின் ஆதிக்கமும் புழக்கமும் ஒவ்வொரு வாழ்வியல் கணத்திலும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அந்நிய நாட்டில் கடவுச்சீட்டு இன்றி தவிக்கும் அகதி போல் அவஸ்தைப்படுகிறான். இப்பெண்கள் மத்தியில் இருக்கும் ஓர் ஆண். ஆணுக்கு முற்றிலும் நேர்மாறான நுண்ணுணர்வும் மொழியும் தேவைகளும் கொண்டவர்கள் பெண்கள் என்பதை பேசுகின்றன இந்த கட்டுரைகள். (வெளியீடு: உயிர்மை பதிப்பகம்)

தமிழகத்தில் முஸ்லிம்கள்- எஸ்.எம்.கமால்

மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது. இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனியொரு மொழிப் பிரதேசத்தில் ஒரு பகுதி இனக்குழுவாகவும் ஆக்கம் பெறும் போக்குகளை விவாதிக்கிறது. (வெளியீடு: அடையாளம் பதிப்பகம்)

(இதன் தொடர்ச்சி காலை 7 மணிப் பதிப்பில்)

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-1

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

செவ்வாய் 9 ஜன 2018