மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 நவ 2019

வண்ணதாசனுக்குக் கிடைத்த கௌரவம்!

வண்ணதாசனுக்குக் கிடைத்த கௌரவம்!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது (2017) இவ்வருடம் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட இருக்கிறது.

கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது தமிழின் முதன்மையான இலக்கிய விருதுகளில் ஒன்று. தேர்ந்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருது இந்த வருடம் வண்ணதாசனுக்கு அளிக்கப்பட இருக்கிறது.

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ்.கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் மூத்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகனாவார்.

60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் எனப் படைத்துள்ளார். இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு இவர் குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘எல்லோருக்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக வந்துள்ளன. நவீன தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் அதிக கவனம்பெற்றுள்ள இவருடைய படைப்புகள் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.

சாகித்ய அகாடமி விருது, சிற்பி விருது, பாவலர் விருது, விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் வண்ணதாசன் அடுத்ததாக இயல் விருதைப் பெறவிருக்கிறார். இயல் விருதைப் பெறும் 19ஆவது தமிழ் இலக்கிய ஆளுமை இவராவார்.

இதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர்.மயூரநாதன் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து இயங்கிவருபவரும், இலக்கியவாதிகளாலும் வாசகர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவருமான வண்ணதாசனுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான இயல் விருது கிடைத்திருப்பது அவரது இலக்கிய பணிக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.

இந்த இயல் விருது 2500 டாலர் பணப்பரிசும் விருது கேடயமும் கொண்டது. டொரண்டோவில் வரும் (2018) ஜூன் மாதம் நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.

செவ்வாய், 9 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon