மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு உயர்வு!

பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு உயர்வு!

2018-19ஆம் நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது முந்தைய மதிப்பீட்டைக் குறைக்காமல் 7.6 சதவிகிதத்திலேயே கிரிசில் நிறுவனம் வைத்துள்ளது.

பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்பட்டது. மேலும், வேளாண் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டதால் மதிப்பீட்டு ஆய்வு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்தத் தங்களது மதிப்பீடுகளைக் குறைத்துவருகின்றன. அந்த வகையில் மத்திய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2017-18 நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் 2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாகவே இருக்கும் என்று கிரிசில் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகி வளர்ச்சி மேம்படும் என்று கூறியுள்ள கிரிசில், அதிகரித்துவரும் தனியார் நுகர்வானது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் 8.7 சதவிகித வளர்ச்சியைக்கொண்டிருந்த தனியார் நுகர்வு, 2017-18 நிதியாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சியைக்கொண்டிருக்கும் எனவும் கிரிசில் மதிப்பிட்டுள்ளது. வங்கித் துறை மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2.11 லட்சம் கோடி மூலதலனமானது வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 10 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon