மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள்!

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள்!

தொகுப்பு : தினேஷ்பாரதி

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி இன்று (ஜனவரி 10) தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

தமிழ் மொழி சார்ந்த படைப்புகள் மட்டுமல்லாமல் பிற மொழியிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் இந்த புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு நாவல்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனும் பண் பாடும்-ஹால்டார் லேக்ஸ்நஸ்

(தமிழில்: எத்திராஜ் அகிலன்)

ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமத்தில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த அநாதைச் சிறுவன் அல்ஃப்க்ரைமரின் மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். வெளியுலகின் சலனங்களையும் காலத்தின் நகர்வையும் பிடிவாதமாக மறுத்து, தாங்களே வகுத்துக்கொண்ட மதிப்பீடுகள், எளிய தேவைகளுடன் வாழும் பாசாங்கற்ற மனிதர்கள்தான் இந்த நாவலின் மையப் பாத்திரங்கள். இவர்களின் சிடுக்கற்ற, சகஜமான வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் நவீன வாழ்வின் பகட்டு, வெறுமை இவற்றின் மீதான விமர்சனம் மறைமுகமாக இந்நாவலில் வெளிப்படுகிறது. அற்புதக்கதைகளின் எளிமையும் ஈர்ப்பும் நாட்டார்கதைகளின் நகைச்சுவையும் கலந்து படைக்கப்பட்டுள்ள இந்நாவலைத் தமிழ்வாசகர்கள் மிக நெருக்கமானதாக உணர்வார்கள். (வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்)

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

(தமிழில்: ஆசை)

வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்தது. பிறகு, திக் நியட் ஹான் பிரான்சில் அரசியல் தஞ்சம் அடைந்தார். அங்கே 1982இல் தனது தியான சங்கத்தைத் தொடங்கி, தற்கால வாழ்வுக்கு மிக அவசியமான பௌத்தத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் இவர், எந்த ஒரு சித்தாந்தத்தையும், அது பௌத்தமாக இருந்தாலும்கூட, விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை போதித்துவருபவர். ’அமைதி என்பது நாமே’ (Being Peace) என்னும் இப்புத்தகம் நவீன ஆன்மீக கிளாசிக்காகப் புகழ்பெற்றது. (வெளியீடு: க்ரியா பதிப்பகம்)

வீழ்ந்தவர்கள்-லியா மில்ஸ்

(தமிழில்: பெர்னார்ட் சந்திரா)

கேட்டி கிரில்லி ----& பழைமைவாதச் சமூகத்துக்குள் தனது இடத்தைத் தேடமுயற்சி செய்து கொண்டிருக்கும் இளம்பெண். -அவளது அன்புக்குரிய இணைப் பிறவிச் சகோதரன், லியாம் மேற்குப் போர்முனையில் கொல்லப்பட்டான். ஒருவருடம் கழிந்தபின் திடீரென உயிர்ப்புத் திருநாள் விடுதலைக் கிளர்ச்சி வெடித்து டப்ளின் நகரம் வன்முறையால் சூழப்பட்ட நிலையில் தனது சகோதரன் உயிரை விடக் காரணமாயிருந்த கொள்கைக்கும் தனது உணர்வுப்பூர்வமான நாட்டுப்பற்று, தனது நகரம், அதன் மக்கள் மேலுள்ள நேசத்துக்குமிடையே நிலைதடுமாறுகிறாள் கேட்டி. தனது நண்பர்கள் வீட்டில் அடைக்கலம்புகும் அவள், தனது சகோதரனுடன் போர் முனையிலிருந்த ஹ்யூபி வில்சனைச் சந்திக்கிறாள். அப்போது புதிய வாழ்க்கையைக் கனவுகண்டுகொண்டிருக்கும் அந்த இரு இளவயதினருக்கிடையே துடிப்பான உரசல்கள் கிளர்ந்தெழுகின்றன. (வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்)

மெர்சோ: மறுவிசாரணை – காமெல் தாவுத்

(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம்)

காம்யுவின் 'அந்நியன்' நாவல் இப்படி ஆரம்பிக்கிறது: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ அந்நியனின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும் அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத் எழுதிய நாவல் 'மெர்சோ: மறுவிசாரணை.' இந்நாவல், ‘இன்று அம்மா இன்னும் உயிரோடிருக்கிறாள்’ எனத் தொடங்குகிறது.

பிரெஞ்சு மூலத்தில், ‘அந்நியன்’ புத்தகத்தில் உள்ள மொத்த எழுத்துகள் (நிறுத்தற்குறிகளையும் சேர்த்து) எவ்வளவோ, துல்லியமாக அதே அளவு இந்தப் புத்தகத்தில் இருக்கும்படி காமெல் தாவுத் கவனமாக எழுதியிருக்கிறார். அந்நியன் வாசித்தவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல். (வெளியீடு: க்ரியா பதிப்பகம்)

நிலத்தின் விளிம்புக்கு-டேவிட் கிராஸ்மன்

(தமிழில்: அசதா)

ஒரு இஸ்ரேலியப் படைவீரனது தாயின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் இஸ்ரேலிய- பாலஸ்தீனிய யுத்தத்தைப் பக்கச் சார்பின்றி அணுகியிருக்கும் நூலாசிரியர் இஸ்ரேலிய அரசாங்கத்தையும் தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வருபவர். இஸ்ரேலியப் படைவீரனான தனது மகனை யுத்தத்தில் பறிகொடுத்தவர். ஒருவிதத்தில் நாவலில் வரும் தாயான ஓரா, டேவிட் கிராஸ்மன்தான். எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படையிலிருக்கும் தனது மகனை இந்நாவல் காப்பாற்றும் என அவர் நம்பினார். நிதானமும் அழகும் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது. (வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்)

(இதன் தொடர்ச்சி காலை 7 மணி பதிப்பில்)

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-1

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 10 ஜன 2018