மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள் 2

தொகுப்பு : தினேஷ்பாரதி

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் புத்தகக் காட்சியை முன்னிட்டு கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளனர். அத்தகைய கட்டுரைத் தொகுப்புகள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈழ இலக்கியம்: ஒரு விமர்சனப் பார்வை - ஜெயமோகன்

இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளைக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக் கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப் பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன். (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)

மனுஷ்ய புத்திரன்: 2 கட்டுரைத் தொகுப்புகள்

திராவிடத்தால் வாழ்ந்தோம்

திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதாரச் சமூக சித்தாந்தம். இன ரீதியாக மொழி ரீதியாக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் மீட்சிக்காகக் கண்டடைந்த சித்தாந்தமே திராவிடம். இந்த நூலின் கட்டுரைகள் திராவிட இயக்கம் பற்றிப் பேசுகின்றன. தலைவர் கலைஞர் பற்றிப் பேசுகின்றன. தளபதியைப் பற்றிப் பேசுகின்றன. திராவிட அரசியலின் அடிப்படையில் சமகால அரசியல் நிகழ்வுகளைப் பேசுகின்றன.

சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்

மனுஷ்ய புத்திரன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம், இலக்கியம், ஊடகம், பதிப்புலகம், மனித உறவுகள், ஆளுமைகள் என பல்வேறு தளங்களில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. (2 புத்தகங்களும் உயிர்மை பதிப்பகம்)

ஆதவன் தீட்சண்யா: 2 கட்டுரைத் தொகுப்புகள்

எஞ்சிய சொல்

அச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை – அறிமுகவுரை - அணிந்துரை. அச்சான பிறகு எழுதினால் அது விமர்சனம் என்று இங்கு நிலவும் கேலியை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது. வாழ்வைப் பற்றிய விமர்சனம்தான் இலக்கியம் என்றால் அந்த இலக்கியம் எவ்வாறு வாழ்வைப் பேசியிருக்கிறது என்று பரிசீலிப்பதையே நான் விமர்சனமாக புரிந்துகொண்டிருக்கிறேன்.

நான் ஒரு மநுவிரோதி

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துகள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்துக்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை. (2 புத்தகங்களும் சந்தியா பதிப்பகம்)

அச்சப்படத் தேவையில்லை - சீனிவாசன் நடராஜன்

எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன். ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்பாட்டுத்தளத்துக்கு நகர்த்திவிடலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றிலும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே, எதையும் பதிவாக்குவதும் பாதுகாத்து வைப்பதும் அவர் இயல்பு. அவ்வாறு தமது சொந்த அபிப்ராயங்களைப் பதிவாக்கி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொன்றும் மிகக்குறைந்த சொற்களால் எழுதப்பட்டுள்ளன. ‘சிறியதன் அழகு’ நிரம்பியவை. விமர்சனக் கட்டுரைகள் அருகிவரும் இன்றைய சூழலில் சீனிவாசன் நடராஜனின் இக்கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. (வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்)

சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும் - எம்.ஏ. நுஃமான்

புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி, கலைவாணர், க.நா.சு., ராஜநாராயணன், ஜானகிராமன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், அம்பை, நீல.பத்மநாதன், தோப்பில் முகம்மது மீரான் முதலிய தமிழக எழுத்தாளர்கள் பற்றியும், தாகூர் பற்றியும், சமகால எழுத்துப் படைப்பாளிகள் சிலர் பற்றியும் நுஃமானின் கூரிய விமர்சனப் பார்வை இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளது. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

சரவணன் சந்திரனின் 2 கட்டுரைத் தொகுப்புகள்

மதிகெட்டான் சோலை

சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்னைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்த சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு முன்முடிவுகளோடு விடியங்களை அணுகாமல் புரிந்துகொள்ள விழைகிறது.

எக்ஸ்டஸி

புள்ளிவிவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும் பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை முன்னிறுத்துகிறது. (2 புத்தகங்களும் கிழக்கு பதிப்பகம்)

மைக்ரோ பதிவுகள் - ராஜா சந்திரசேகர்

2010 காலகட்டம் தொடங்கி நான்கைந்து ஆண்டுகள் இணையத்தில் எழுதிய டிவிட்ஸின் தொகுப்பே இந்தப் புத்தகம். டிவிட்டரின் காலவெளியில் புதையுண்டு போன கடந்த கால கீச்சுகளைச் சேகரித்து இலக்கியவெளியில் நூலாக்குதல் ஓர் இனிப்பான முயற்சி. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கீச்சுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தத் தொகுப்பு. மைக்ரோ பதிவுகளாகப் பிறந்தாலும் மாஸ் அதிர்வுகளை உண்டாக்கும் ஒரு வாசிப்பு அனுபவத்துக்கான நுழைவாயில். (வெளியீடு: சந்தியா பதிப்பகம்)

கருங்கடலும் கலைக்கடலும் - தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ ஒரு பயண இலக்கியம். தி.ஜானகிராமன் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக்கதை. சோமலெ, ஏ.கே.செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி.ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. ஒரு புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங்களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோள ரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. ஆனால், தி.ஜா. தனக்கே உரிய பாணியில் நாடுகளைக் காண வைக்கிறார். (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

எதிரொலிக்கும் அறைகள் - ஷான்

தொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும்விட அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்குத் தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதேநேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டுகொண்டே வருகிறது. அதை பட்டியலிட்டு எடுத்துச் சொல்கிறது இந்நூல்... (வெளியீடு:உயிர்மை பதிப்பகம்)

சொக்கட்டான் தேசம் - ராஜசங்கீதன்

சமூகம் சார்ந்த கட்டுரைகளில் வெளிப்படும் தார்மீக ஆவேசமும், அரசியல் கட்டுரைகளில் வாதங்களை முன்வைக்கும் கூர்மையும், சினிமா சார்ந்த கட்டுரைகளில் ஊடுபாவியிருக்கும் அங்கதமும், உளவியல் தொடர்பான விஷயங்களை எழுதும் போது தொனிக்கும் சிநேக பாவமும் என அவரது எழுத்துகள் கலைடாஸ்கோப்பில் இடப்பட்ட கண்ணாடித் துண்டாக வண்ணம்காட்டி மிளிர்கின்றன.

பொதுவாக முகநூலில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் காரணமாக எழுதப்படும் பல்வேறு பதிவுகளைப் போலன்றி, அத்தனை தீவிரத்தன்மையுடனும், ஆத்மார்த்தமாகவும் ராஜசங்கீதனின் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது. (வெளியீடு: வாசக சாலை பதிப்பகம்)

இவை போன்று பல கட்டுரைத் தொகுப்புகள் புத்தகக் காட்சியில் இடம்பெறவுள்ளன.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-1

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 10 ஜன 2018