மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 2

தொகுப்பு: தினேஷ்பாரதி

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10 தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

தமிழ்மொழி சார்ந்த படைப்புகள் மட்டுமல்லாமல் பிற மொழியிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு நாவல்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உடைந்த குடை - தாக் ஸூல்ஸ்தாத்

(தமிழில்: ஜி. குப்புசாமி)

உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர்பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது.

இந்த நாவலில் ஈலையாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவரும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித் தேடி தோல்வியடைந்து, மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதையும், விரக்தியும், உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்திரிக்கிறார்.

பெரிதும் அகவயப்பட்ட இந்த நாவல் நார்வீஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

ரூபி பாஸ்கேயின் மர்ம நோய் - ஹஸ்தா சௌவேந்திர சேகர்

(தமிழில்: இரா.செந்தில்)

காதாம்டுகி சொல்வது சரிதான். ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது. அது, சிதோ, தோஸோ மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம். அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும். (வெளியீடு: எதிர் வெளியீடு)

சாதுவான பாரம்பரியம் - ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா

(தமிழில்: முடவன் குட்டி முகம்மது அலி)

1860களின் ஃபின்லாந்தின் மிகப் பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் இந்த நாவல், யூகா தோய்வொலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் வாழ்க்கை வரலாற்றை ஃபின்லாந்தின் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலகட்டம் வரை (1917) பின்தொடர்கிறது. நாவலின் கருப்பொருள் நிலம். அடிப்படைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி மிகச் சுருக்கமாக கதை சொல்லிய அதிசயம் நாவலில் சாத்தியமாகியுள்ளது. அவலம், பரிவு, மென்மை என மனித உணர்வுகளை ஆழ்ந்த புரிதலுடன் நாவல் பேசுகிறது. நாவலின் உரைநடை கவிதையாய் உயர்கிறது. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

நிலவறைக் குறிப்புகள் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

(தமிழில்: எம்.ஏ.சுசீலா)

ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், “இது மனித இயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம்” என்கிறார் கோபி கிருஷ்ணன். (வெளியீடு: நற்றிணை பதிப்பகம்)

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன்

(தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி)

வெவ்வேறு பின்புலன்களைக்கொண்ட இருவர் ஒருநாள் இரவு ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும், ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. அதேசமயம், நிலையான, உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்ற சிந்தனைக் கோட்பாடும் வெள்ளிடை மலையாக இந்நாவலில் வெளிப்படுகிறது. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

குந்தரின் கூதிர்காலம் - ஹுவான் மனுயேல் மார்க்கோஸ்

(தமிழில்: எல்.ஜே.வயலட்)

அரசியல் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் நிகழும் கொலைகளை நோக்கி இட்டுச்செல்லும் சம்பவங்களில் தொடங்கும் கதை, வெறுமனே யார் கொலை செய்தது என்பதைத் தாண்டிப் பல தளங்களில் மர்ம நாவல்களைவிட விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. காதல், கவிதையின் குரல், ஆற்றுப்படுத்தும் கலையின் ஆற்றல், அரசியல், புரட்சி, தென்னமெரிக்க வரலாறு என பலவும் இக்கதையாகவும் இக்கதையின் அடித்தளமாகவும் இருக்கின்றன. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

இவை போன்று பல மொழிபெயர்ப்பு நாவல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்றன.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 1

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 11 ஜன 2018