மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ஐ.பி.எல் : அணிகளின் தேர்வுகள் சரியானதா?

ஐ.பி.எல் : அணிகளின் தேர்வுகள் சரியானதா?

​ஐ.பி.எல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (ஜனவரி 27) பெங்களூருவில் தொடங்கியது.

ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் கூறவேண்டும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடுவதால் இந்த போட்டிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. அதிலும் இந்த வருடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது எனலாம். காரணம் கடந்த இரண்டு வருடங்களாக விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் காண்கின்றன. அதுமட்டுமன்றி இந்த தொடரில் பெரும்பாலும் அனைத்து அணிகளும் புதுமையான வீரர்களைத் தேடி புதிய அணியை தயார் செய்வதற்கு முயற்சி செய்துவருவதால் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அதனுடன் ஏலத்தின் போது ரைட் டூ மேட்ச் கார்ட் பயன்படுத்தி 3 வீரர்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் அனைத்து அணிகளும் பெரும்பாலும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்காக விட்டுவிட்டனர். இதில் பல முன்னணி வீரர்களும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனவே அவர்களை எந்த அணி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. மொத்தம் 2 நாட்கள் (ஜனவரி 27,28) நடைபெறும் இந்த ஏலத்தின் முதல் நாளான இன்று எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் குறைந்த விலைக்கு ஏலம் பெறப்பட்டதும், சில வீரர்கள் எந்த அணிகளாலும் ஏலம் பெறப்படாமல் போனதும், இளம் வீரர்களுக்கு அதிக விலை கிடைத்ததும் என பல்வேறு சுவாரஸ்யங்கள் முதல் நாள் ஏலத்தில் நடைபெற்றது. அதுகுறித்து இங்கு காண்போம்.

இந்திய அணியின் தொடக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவன் உடன் இன்றைய ஏலம் தொடங்கியது. ஆரம்பவிலையாக தவனுக்கு ரூ. 2 கோடி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக விளையாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அவரை ஏலம் பெற கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியிட்டனர். இறுதியாக கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 5.2 கோடிக்கு தவன்னை ஏலம் எடுத்தது. இருப்பினும் ஹைதராபாத் அணி அவரை விட்டுக்கொடுக்காமல் (RTM) ரைட் டூ மேட்ச் கார்ட் மூலம் பெற்றது. அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.2 கோடி ஆரம்ப விலையுடன் ஏலம் விடப்பட்டார். அவரை சென்னை அணி மீண்டும் பெரும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனியும் அஸ்வின் சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவார், அவரை நிச்சயம் சென்னை அணி ஏலத்தில் பெற முயற்சிக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் ரூ. 7.60 கோடிக்கு அஸ்வினை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் பெற்றது.

சென்னை அணி RTM-பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தும் அதனை விட்டுவிட்டது. அதன் பின்னர் ஐ.பி.எல் நாயகன் க்றிஸ் கெயில் ஆரம்ப விலை ரூ.2 கோடியுடன் ஏலம் விடப்பட்டார். அவரை எந்த அணியும் ஏலத்தில் பெற முன்வரவில்லை என்பது மிகுந்த ஆச்சர்யம் தான். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரைத் திரும்ப பெற அந்த அணியும் முயற்சி செய்யாததால் அவர் விற்கப்படாத வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து ஏலம் விடப்பட்ட வீரர் கீரன் பொல்லார்டு ரூ. 5.4 கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் பெறப்பட்டார். இருப்பினும் இந்த விலைக்கு அவர் தகுதியானவர் என்பதை உணர்ந்த மும்பை அணி அவரை ரைட் டூ மேட்ச் கார்ட் மூலம் மீண்டும் அணியுடன் இணைத்துக் கொண்டது.

ராசியில்லாத பஞ்சாப்

அவரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரூ.14.5 கோடிக்கு ஏலம் பெறப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்ட்ரோக்ஸ் ஏலம் விடப்பட்டார். கடந்த ஆண்டு போலவே இந்த வருடமும் அவர் மீதான எதிர்பார்ப்பு அனைத்து அணிகளிடமும் இருந்தது. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் முதலில் ஏலம் கேட்கத் தொடங்கினர். ரூ. 6.4 கோடியை எட்டியதும் சென்னை அணி ஏலத்தில் இருந்து விலகியது. ஆனால் அதன்பின்னர் கொல்கத்தா அணி பஞ்சாப் உடன் போட்டியிட்டு அவரை பெற முயற்சித்தது. இருப்பினும் இறுதியில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் கேட்ட ராஜஸ்தான் அணி அவரை தக்க வைத்துக் கொண்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் ரூ.1.5 கோடி ஆரம்ப விலையுடன் ஏலம் விடப்பட்டார். பஞ்சாப் அணி மட்டும் அவரை ரூ.1.6 கோடிக்கு ஏலம் கேட்டது. எனவே அவர்களுக்கு ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் எளிதில் கிடைக்கப்பெறும் வேளையில் சென்னை அணி RTM கார்ட் மூலம் அவரை பெற்றது. குறைந்த விலையில் முக்கிய வீரரை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. இந்தமுறை இந்தியன் பேட்ஸ்மேன் ரஹானே ஏலம் விடப்பட்டார். அவரை ரூ.4 கோடிக்கு ஏலம் பெற பஞ்சாப் அணி முயற்சித்தது. ஆனால் ராஜஸ்தான் அணி அவரை RTM மூலம் பெற்றது.

பஞ்சாப் அணி தொடர்ச்சியாக வீரர்களை ஏலம் பெற்ற போதிலும் அவர்களை RTM மூலம் அணிகள் பெற்றுக்கொள்வதால், பல வீரர்களை அந்த அணி இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் ரூ.9.4 கோடிக்கு ஏலம் பெறப்பட்டார். அவர் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி பெற்ற இரு பேட்ஸ்மேன்கள்

ஐ.பி.எல் தொடரில் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் கிளேன் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு கிங்க்ஸ் லெவன் அணிக்காக விளையாடினார். அவர் இந்த முறை ஏலம் விடப்பட்டதும் அவரை பெற கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் ஆர்வம் காட்டினர். இருப்பினும் டெல்லி அணி ரூ.9 கோடிக்கு அவரை தக்க வைத்துக் கொண்டது. மேக்ஸ்வெல் டெல்லி அணியில் 2012ஆம் ஆண்டு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் விளையாடிய கவுதம் காம்பீர் இந்த முறை டெல்லி அணியால் ரூ. 2.8 கோடிக்கு ஏலம் பெறப்பட்டார். இரண்டு பேட்ஸ்மேன்களை தன்வசம் தக்கவைத்துக் கொண்ட டெல்லி அதன் பின்னர் நீண்ட நேரம் அமைதி காத்தது.

சென்னை அணியின் சரியான தேர்வு

அவர்களைத் தொடந்து ஆல்ரவுண்டர் டுவைய்ன் பிராவோ ஏலம் விடப்பட்டார். அவரை பெற கிங்க்ஸ் லெவன் அணி அதிகம் ஆர்வம் காட்டியது. அதனால் ரூ.6.4 கோடிக்கு அவரை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்தது. ஆனால் சென்னை அணி RTM மூலம் பிராவோவை அணியில் பெற்றுக்கொள்வதாக அறிவித்ததால் பஞ்சாப் அணிக்கு ஏமாற்றம் அதிகரித்து. ஏனெனில் இதுவரை பல முக்கிய வீரர்களைச் சிறந்த விலைக்கு பெற்ற பின்னரும் RTM மூலம் பஞ்சாப் அணி அவர்களை இழந்துள்ளது.

தொடர்ச்சியாக ரூ.27.8 கோடிக்கு ஏலம்

அதன்பின்னர் பஞ்சாப் அணி இதேபோல் நடைபெற்றால் முக்கிய வீரர்களை இழந்து விடுவோம் என்ற பயத்தில் அதிகவிலை கொடுத்து வீரர்களைப் பெற முடிவு செய்தது. எனவே கருண் நாயர் (ரூ.5.6 கோடி) மற்றும் லேகேஷ் ராகுல் (ரூ.11 கோடி) இருவரையும் மற்ற அணிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் பஞ்சாப் அணி பெற்றுக்கொண்டது. ராகுல் ரூ.11 கோடிக்கு ஏலம் பெறப்பட்டதால் அவரை RTM மூலம் பெறத் பெங்களூரு அணி தயங்கியது. அதன்பின்னர் இந்திய வீரர் யுவராஜ் சிங்கை ஆரம்ப விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் பெற்றது பஞ்சாப் அணி. அவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாததால் அவரை பெற அனைத்து அணிகளும் தயக்கம் தெரிவித்தனர்.

அவரைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஏலம் விடப்பட்டார் அவர் ரூ.3 கோடிக்கு மும்பை அணியால் ஏலம் பெறப்பட்டார், அவரை RTM மூலம் பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்சை ரூ 6.2 கோடிக்கு பஞ்சாப் அணி பெற்றது. சிறந்த வீரர்களை தொடர்ச்சியாக தங்கள் அணிக்கு பெற்றது ஒருபுறம் இருந்தாலும் ரூ.27.8 கோடிக்கு 5 பேட்ஸ்மேன்களை மட்டும் பெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சில் அஸ்வினை மட்டும் பெற்றுள்ளது வருத்தம் தரும் ஒன்றாக இருந்தது.

அதிகம் செலவிட்ட சென்னை

ஹர்பஜன் சிங் (ரூ.2 கோடி), ஷேன் வாட்சன் (ரூ.4 கோடி), அம்பதி ராயுடு (ரூ.2.2 கோடி) என சரியான தேர்வுகளை செய்து வந்த சென்னை அணி கருண் ஷர்மா (ரூ.5 கோடி), கேதார் ஜாதவ் (ரூ.7.8 கோடி) மீது அதிகம் செலவிட்டதால் அதிகம் தொகையை இழந்து பின்னர் ஏலத்தில் வந்த முக்கிய வீரர்களை வாங்க முடியாமல் திணறியது. ஆனால் சென்னை அணியைப் பொறுத்த வரை தற்போது மிடில் ஆர்டர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் தொடக்க வீரர்களை எடுக்க தவறி உள்ளது. எனவே மீதமுள்ள தொகைக்குள் முன்னணி வீரர்களை சென்னை அணி திரும்ப பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஸ்மார்ட்டாக செயல்பட்ட இரு அணிகள்

முதல் நாள் ஏலத்தில் தொடக்கம் முதல் நீண்ட நேரம் அமைதியாக இருந்த கொல்கத்தா அணி சரியான நேரத்தில் மட்டுமே ஏலம் கேட்டு சரியான வீரர்களை மட்டும் தேர்வு செய்தது. அதிக விலை கொடுத்து வீரர்களை வாங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஒரு அணியை இதுவரை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ஆண்ட்ரோ ரசூல் இருவரும் தக்க வைக்கப்படிருந்த நிலையில் பியூஷ் சாவ்லா மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவரையும் RTM மூலம் பெற்றது. அதுமட்டுமன்றி வேகப்பந்து வீச்சாளர்மிட்செல் ஸ்டார்க் (ரூ.9.4 கோடி), பேட்ஸ்மேன்கள் க்றிஸ் லயன் (ரூ.9.6 கோடி), தினேஷ் கார்த்திக் (ரூ.7.4 கோடி) ஆகிய வீரர்களை ஏலத்தில் பெற்றுக்கொண்டது. அதேபோல் டெல்லி அணி தொடக்கத்தில் மேக்ஸ்வெல், காம்பீர் போன்ற முன்னணி வீரர்களை ஏலம் எடுத்த பின்னர், இளம் வீரர்கள் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியது. அதேபோல் டி-20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரர் காலின் முன்ரோவை ரூ.1.9 கோடிக்கு மிக எளிதில் பெற்றது டெல்லி.

அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ராபாடாவை ரூ. 4.2 கோடிக்கும், சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவை ரூ.4 கோடி கோடிக்கும் பெற்றது.

சுழற்பந்து வீச்சாளர்களை குறிவைத்த அணிகள்

இந்திய மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களை எந்த அணிகளும் ஏலம் பெறவில்லை. அதனால் இஷாந்த் ஷர்மா, லசித் மலிங்கா போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த அணிகளாலும் தேர்வி செய்யப்படவில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்த பொழுது அனைத்து அணிகளிடமும் பெரும் போட்டி நிலவியது. கடந்த வருடம் நடைபெற்ற பிக்-பாஸ் தொடரில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் ரசீத் கானை ஏலம் பெற பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டினர். இறுதியில் ரூ.9 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் பெறப்பட்ட அவரை ஹைதராபாத் அணி RTM மூலம் திரும்பப் பெற்று பஞ்சாப் அணிக்கு மீண்டும் ஏமாற்றத்தை வழங்கியது. மேலும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் யூசுவெந்திர சஹாலை பெங்களூரு அணி ரூ.6 கோடிக்கு RTM மூலம் திரும்பப் பெற்றது.

முன்னணி வீரர்கள் ஏலம் இவ்வாறாக முடிவுற்ற நிலையில் , இளம் வீரர்களுக்கான (uncapped) தேர்வு மிகவும் சுவாரஸ்யமாக் நடைபெற்றது. அதில் இந்திய ஜூனியர் உலகக்கோப்பையில் விளையாடி வரும் இளம் வீரர்கள் ஏலம் விடப்பட்டு எதிர்பாராத விலைக்கு ஏலம் பெறப்பட்டனர். அதுகுறித்து காலை 7 மணி அப்டேட்டில் காணலாம்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

சனி 27 ஜன 2018