இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் குறைவாகத் தொடங்கி இறுதியில் உச்சத்தைத் தொட்ட துறை சினிமா வர்த்தகம்.
தமிழக மக்களின் பொழுதுபோக்கு வாழ்க்கையில் நாடகமும் கிராமியக் கூத்துகளும் ஆக்கிரமித்திருந்தன. அதிலிருந்து அவர்களை ஈர்த்து சினிமாவிற்குள் கொண்டுவந்த காலகட்டம் 1950க்குப் பின்னால்.
சுதந்திரத்துக்கு முன்பு சுதந்திரப் போராட்டத்துக்கான பிரச்சார சாதனமாக காங்கிரஸ், இடதுசாரிகளால் சினிமா பயன்படுத்தப்பட்டது.
1950க்குப் பின்னால் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் திரண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் திராவிட, மற்றும் மொழி அரசியலை மக்களிடம் கொண்டுசெல்ல சினிமாவைப் பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தினார்கள். 1967இல் திமுக, அண்ணாதுரை தலைமையில் தமிழக ஆட்சி அதிகாரத்தை தேர்தல் மூலம் வென்றெடுத்தது.
இன்று வரை தமிழக முதல்வராக சினிமா துறையினரையே தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துவருகின்றனர்
தங்கள் அரசியல் பிரசாரத்திற்கும், முதல்வர் ஆவதற்கும் சினிமாவைப் பயன்படுத்திக்கொண்ட மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரும், அடுத்து களத்தில் இருக்கும் ரஜினி, கமல் இவர்கள் யாரும் தமிழ் சினிமாவை வியாபார ரீதியாக, தயாரிப்பாளர்களை வளப்படுத்த சினிமாவை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தப் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்ததில்லை.
விதிவிலக்காக, கமல்ஹாசன் புதிய தொழில்நுட்பத்தை தமிழ் பட தயாரிப்பில் கொண்டு வந்தார். தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களிடம் விஸ்வரூபமெடுத்திருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத் திரையிடல் பஞ்சாயத்தைத் தொடங்கிய பெருமை கமல்ஹாசன் நாயகனாக நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலிருந்து தொடங்குகிறது.
பிலிம் ரோல் பயன்படுத்தி சினிமா தயாரிக்கப்பட்டுவந்த இந்திய சினிமாவில் பிலிம் இல்லாமல் டிஜிட்டல் டெக்னாலஜியைப் பயன்படுத்தி மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பிலிம் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு தயாரிப்பில் டிஜிட்டல் ஆதிக்கம் செலுத்தியது. அதன் தொடர்ச்சியாக, பிரிண்ட் இல்லாமல் திரையரங்குகளில் படங்களை திரையிடுவதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர்.
இலவசமாகச் சேவை புரிகிறோம், வாய்ப்பு தாருங்கள் எனக் கெஞ்சிக் கூத்தாடித் தமிழ் சினிமா திரையிடலில் நுழைந்த டிஜிட்டல் நிறுவனங்கள் மொத்த சினிமா இயக்கத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன.
தயாரிக்கப்படும் படத்தின் மூலப் பிரதி இன்று முதலீடு செய்யும் தயாரிப்பாளரிடமோ, வியாபாரம் செய்யும் விநியோகஸ்தர்களிடமோ இல்லை. ஒரு பைசாகூட முதல் போடாத டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.
இந்த நிலை ஏற்பட யார் காரணம்? இதிலிருந்து தயாரிப்பாளர்கள் மீண்டு வர முடியுமா? பிழைப்பு தேடி வந்த நிறுவனங்களைக் கட்டளையிடும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த என்ன வழி?
அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்…
(நாளை: சினிமாவும் பிலிம்ரோலும் - தயாரிப்பாளர்களின் பொற்காலம்!)