மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி: அப்பல்லோவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி: அப்பல்லோவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016 செப்டம்பர் 22ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தானே ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் மருத்துவ மனையில் உள்ளதா என்று அப்போலோ மருத்துவமனை வரும் 7ஆம் தேதி பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரை சார்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், “ நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள். எனக்கும் ஜெயலலிதாவிற்கும் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,ஜெயலலிதாவிற்கு ரத்த சொந்தமுள்ள தீபா மற்றும் தீபக் ஆகியோரை இந்த வழக்கில் நீதிமன்றமே சேர்த்து இந்த வழக்கு தொடர்பாக அவர்களும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது..

தீபா மற்றும் தீபக் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், “ஜெயலலிதா வின் சொத்துகளை குறி வைத்தே அம்ருதா ஒரு பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளார். சைலஜா என்ற சகோதரியே ஜெயலலிதா விற்கு கிடையாது. என்னுடைய பாட்டி சந்தியாவிற்கு ஜெயலலிதா, ஜெயக்குமார் தவிர வேறு யாரும் வாரிசு இல்லை. எனவே அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று அந்த பதில் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 23) மீண்டும் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, “இந்த வழக்கு தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது டி.டி.வி ஆதரவாளர் புகழேந்திக்கு ஆஜரான வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமன் என்பவர், இந்த வழக்கு தொடர்பாக தனது மனுதாரரான புகழேந்திக்கு தெரியும் என்றும், எனவே இந்த வழக்கில் அவரையும் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “உங்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இது போன்ற பலபேர் தங்களையும் வழக்கில் சேர்க்கும்படி கேட்பார்கள். இந்த வழக்கில் வெளி ஆட்களை இணைப்பு மனுதாரர்களாக சேர்த்தால் சரியாக இருக்காது’’ என்று தெரிவித்தார். மேலும், “புகழேந்தி மனு மீது உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா?’’ என்று என தீபா தரப்பு வழக்கறிஞர் சாய்குமார் என்பவரிடம் கேட்டார் நீதிபதி.

அதற்கு தீபா தரப்பு வழக்கறிஞர், ”புகழேந்தியின் மனு கிடைக்கவில்லை. அந்த மனுவைப் பார்த்த பிறகு தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும்”என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக புகழேந்திக்குப் பல்வேறு விவரங்கள் தெரியும் என தெரிவித்தார்.

அதன் பிறகு அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், “இது அம்ருதா தொடர்ந்த வழக்கு என்பது குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றும், இந்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடக் கூடாது” என வாதம் வைத்தார் .

அப்போது குறுக்கிட்டு ஆட்சேபணை தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், “இது பொதுவான வழக்கு. ஆகவே பத்திரிகைகள் செய்தி வெளியிடக் கூடாது என்று சொல்லிவிட முடியாது’’ என்று அதை மறுத்தார்.

மேலும் இந்த வழக்கில் உண்மைத் தன்மையை அறிய, ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளதா இல்லையா என்று அம்மருத்துவமனை நிர்வாகம் வரும் மார்ச் 7ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டார் நீதிபதி.

அப்பல்லோ ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அதன் பின் அம்ருதாவின் ரத்த மாதிரிகளும் ஜெ,வின் ரத்த மாதிரிகளும் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும் என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்.

வெள்ளி, 23 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon