மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

கேரளா: பயன்பாட்டுக்கு வந்தது கழிவகற்றும் ரோபோ!

கேரளா: பயன்பாட்டுக்கு வந்தது கழிவகற்றும் ரோபோ!

சாக்கடைக் கழிவுகளை அகற்றுவதற்கு பேண்டிகூட் எனும் ரோபோவைப் பயன்படுத்துவதற்கான அறிமுக விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக மனிதர்கள் சாக்கடையினுள் இறங்குவது தவிர்க்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறது ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனம். ஒரே கல்லூரியில் பயின்ற நான்கு நண்பர்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்நிறுவனம், சாக்கடையில் கழிவுகளை அகற்றுவதற்காக பேண்டிகூட் எனும் ரோபோவைக் கண்டுபிடித்துள்ளது. (ஜென் ரோபோட்டிக்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் அருண் ஜார்ஜ், இதுகுறித்து நமது மின்னம்பலத்துக்கு அளித்த நேர்காணல் சமூக அவலத்துக்கான சாவுமணி என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. {https://minnambalam.com/k/2018/02/25/24}) கேரள மாநில அரசினால் பேண்டிகூட் பயன்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். இதற்காக, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது கேரள நீர் ஆணையம்.

கடந்த 26ஆம் தேதியன்று, திருவனந்தபுரத்தில் கேரள நீர் ஆணையம் சார்பில் நடந்த விழாவில், இனி சாக்கடையைச் சுத்தப்படுத்தும் செயல்பாடுகளில் பேண்டிகூட் பயன்படுத்தப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது அம்மாநில அரசு. இந்த விழாவைத் தொடங்கிவைத்த பினராயி விஜயன், ‘மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யச் சொல்லி நிர்பந்தப்படுத்துவது சமூக அவலம்’ என்று பேசினார்.

“சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கினால்தான் அதைச் சுத்தப்படுத்த முடியும் என்ற நிலையை, இந்த ரோபோ தொழில்நுட்பம் மாற்றியுள்ளது. இது ஒரு புதிய தொடக்கம். கேரள நீர் ஆணையத்தைப் பொறுத்தவரை, இது பெருமையான தருணம். மற்ற மாநிலங்களுக்கும் பேண்டிகூட் ஒரு முன்மாதிரியாக இருக்கும்” என்று பேசினார். சமூகப் பிரச்னையை ஒழிப்பதற்காக ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் காட்டிவரும் அக்கறையைப் பாராட்டினார். மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேரள நீர் ஆணையம் புதிய தளத்துக்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் பேசிய ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி விமல் கோவிந்த், கேரளாவிலும் கர்நாடகாவிலும் நிகழ்ந்த துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்களே பேண்டிகூட் கண்டுபிடிக்கப்பட உந்துதலாக இருந்ததாகக் கூறினார். முதலில் திருவனந்தபுரத்தில் பயன்படுத்தப்படும் பேண்டிகூட், மெதுவாக கேரளா முழுவதும் தன் செயல்பாட்டைத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 28 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon