மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

தனிநபரின் பாஸ்போர்ட்டை முடக்க அதிகாரமில்லை!

தனிநபரின் பாஸ்போர்ட்டை முடக்க அதிகாரமில்லை!

தனிநபரின் பாஸ்போர்ட்டை முடக்கக் காவல்துறையினருக்கோ, கீழமை நீதிமன்றங்களுக்கோ அதிகாரமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் பாபு என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது பாஸ்போர்ட்டைக் கைப்பற்றினர்.

2015ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட தனது பாஸ்போர்ட்டைத் திரும்பத்தரக் கோரி ரமேஷ் பாபு அல்லிகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்குப் பண மோசடியில் மருத்துவர் ஈடுபட்டுள்ளதால், அவரது பாஸ்போர்ட்டைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் பாபு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தனிநபர் சுதந்திரமாக பயணம் செய்வதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை எனக் கருத்து தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனிநபரின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றவோ அல்லது முடக்கவோ பாஸ்போர்ட் அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி அல்லிகுளம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

இதையடுத்து தனது தீர்ப்பின்போது, "தனிநபரின் பாஸ்போர்ட்டைக் காவல்துறையினர் கைப்பற்றினால் உடனடியாக அதைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்; காவல்துறையினர் கைப்பற்றிய பாஸ்போர்ட்டை முடக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லாததால், பாஸ்போர்ட்டை முடக்குவது தொடர்பாக முடிவெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நீதிபதி தகுந்த உத்தரவு மட்டுமே பிறப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் உரிமையாளர் உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கப்பட்ட பிறகே முடக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்கின்ற விதிமுறைகளை இனி பின்பற்ற வேண்டும் எனக் கீழமை நீதிமன்றங்களுக்கும் காவல்துறையினருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

வியாழன், 1 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon