மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

எல்கேஜி மாணவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலி!

எல்கேஜி மாணவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலி!

போரூர் அருகே பள்ளி கழிவுநீர் தொட்டியில் மூன்றரை வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், ஆர்.ஆர்.நகர் பிரதான சாலையில் மாசி மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கிவருகிறது. எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்தப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

அதே பள்ளியில்தான், பெரிய கொளுத்துவான்சேரி, மதுரம் நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவரின் மகன் கிருதீஸ்வரன் எல்கேஜி படித்து வந்தான். நேற்று (மார்ச் 2) மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் சிறுநீர் கழிக்க எல்கேஜி மாணவர்கள் சென்றனர். அப்போது அங்கு அடைப்புகள் நீக்குவதற்காக செப்டிங்க் டேங்கை திறந்து வைத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

அங்கு வந்த கிருதீஸ்வரன் அந்தத் தொட்டிக்குள் விழுந்துவிட்டான். இதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சப்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் தொட்டிக்குள் விழுந்த மாணவனை நீண்ட நேரத்துக்குப் பிறகு மீட்டனர். பின்னர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தப் பள்ளியில் சிறுவர்களைக் கழிவறைக்கு அழைத்துச் செல்ல துணைக்கு ஆள் இல்லாமல், தனியாக அனுப்பி வைத்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகம் இறந்துபோன சிறுவனின் மரணம் குறித்து பெற்றோருக்குச் சரியான தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பொதுமக்களும் பிள்ளைகளின் பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பள்ளி உரிமையாளர் மாசிலாமணியைக் கைது செய்யும் வரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் எனச் சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 2 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon