மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

மடாதிபதியானார் விஜயேந்திரர்

மடாதிபதியானார் விஜயேந்திரர்

காஞ்சி சங்கர மடத்தின் 69ஆவது சங்கராச்சாரியாராக இருந்த ஜெயேந்திரர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் மடத்தின் மரபுகளின்படியும், நடைமுறைகளின்படியும், அவருக்கு அடுத்த இளையவரான விஜயேந்திரர் அடுத்த சங்கராச்சாரியராக - மடாதிபதியாகப் பொறுப்பேற்றார் என்று சங்கர மடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 2) மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேசன், “பெரியவர் கடந்த 28ஆம் தேதி முத்தி அடைந்ததை ஒட்டி, இளைய சங்கராச்சாரியரான விஜயேந்திர சுவாமிகள் மார்ச் 1ஆம் தேதியே அடுத்த மடாதிபதியாக அதாவது 70ஆவது மடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்’’ என்று அறிவித்தார்.

ஏற்கெனவே நாம் மின்னம்பலம் செய்தியில் குறிப்பிட்டிருந்தபடி, 70ஆவது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்ற தகவலை காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வக் கடிதம் மூலமாகத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பிவிட்டதாகவும் சுந்தரேசன் குறிப்பிட்டார்.

காஞ்சி காமகோடி பீடத்தில் சங்கராச்சாரியாராக இருப்பவர்தான் காமாட்சியம்மன் கோயிலில் பரம்பரை தர்மகர்த்தா ஆவார். ஆகவே, விஜயேந்திரர் காமாட்சியம்மன் கோயிலில் பரம்பரை தர்மகர்த்தா ஆகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

மடத்து மரபுகளின்படி விஜயேந்திரர், தனக்குப் பிறகான மடாதிபதி பொறுப்புக்கான நபரை இப்போதே தேர்ந்தெடுத்து அவருக்கு உரிய பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அடுத்த பெரியவராக விஜயேந்திரர் பொறுப்பேற்ற நிலையில் அடுத்த இளையவர் யார் என்பதில்தான் இப்போது மடத்தின் கவனம் இருக்கிறது.

வெள்ளி, 2 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon