மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

துணைவேந்தர்கள் மீது கடும் நடவடிக்கை!

துணைவேந்தர்கள் மீது கடும் நடவடிக்கை!

‘துணைவேந்தர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த மாதம் 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நேற்று ராஜ்பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனையில் மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் 20 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய ஆளுநர், “தமிழகத்துக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் அளவுக்குத் துணைவேந்தர்கள் பணியாற்ற வேண்டும். துணைவேந்தர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்த ஆளுநர், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 3 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon