மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 மா 2018

கிணத்தைக் காணோம்?

கிணத்தைக் காணோம்?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 11

இராமானுஜம்

இந்தத் தொடரை எழுதத் தொடங்கியபோது ‘தயாரிப்பாளர்கள் மீது டிஜிட்டல் நிறுவனங்களின் மேலாதிக்கம். இது எப்படி இங்கு சாத்தியமானது? இதற்குத் தீர்வுதான் என்ன?’ என்பதை நோக்கிய கட்டுரையாகவே இருக்க வேண்டும் எனத் தகவல்களை திரட்டத் தொடங்கினோம். அப்போது நமக்குக் கிடைத்த தகவல்களினால் அதிர்ச்சியும் ஆச்சர்யமூட்டும் வகையிலும் வந்து விழுந்தன புள்ளிவிவரங்கள்.

கடந்த 2005இல் திரையரங்குகள் டிஜிட்டல் மயமாகத்தொடங்கி 2007இல் அனைத்துத் தியேட்டர்களும் கியூப், UFO நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இடைப்பட்ட காலங்களில் வந்த பிற டிஜிட்டல் நிறுவனங்களைத் தமிழ் சினிமாவில் வளரவிடாமல் தங்கள் இருப்பை கியூப் நிறுவனம் உறுதிப்படுத்திக்கொண்டது. தனக்குப் போட்டியாக இருந்த UFO நிறுவனத்தின் 60% பங்குகளை கியூப் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. இப்போது எதையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது கியூப் நிறுவனம் மட்டுமே.

கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்குகிறபோது இனிக்கும் வார்த்தைகளை இடைவிடாது பேசி வாக்குறுதிகளை வாரி வழங்குவார்கள். கஸ்டமர் என்ன சொன்னாலும் கேட்பார்கள். இதில் கிறங்கிப்போய் தொலைநோக்கு பார்வையின்றி அவர்கள் நீட்டிய ஒப்பந்தப் பத்திரத்தில் என்ன, ஏது என்று கேட்காமல் கையெழுத்துப் போட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள்.

மூன்று லட்சம் முதலீடு செய்ய தயங்கியதன் விளைவு, லோக்கல் விளம்பரத்திலிருந்து வெளியூர் விளம்பரம் வரை குறைந்தபட்சம் சராசரியாக 3 லட்சம் ரூபாய் வரை ஒரு தியேட்டருக்குக் கிடைத்துவந்தது. கடந்த 12 வருடங்களில் ஒவ்வொரு திரையரங்கும் சுமார் 40 லட்ச ரூபாய் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளது. தியேட்டருக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பர வருவாய் பங்குத்தொகை எதனடிப்படையில் என்று எந்தத் திரையரங்க உரிமையாளரும் கேட்டது இல்லை.

தமிழ்ப் படங்களை தமிழக திரைகளில் திரையிடத் தயாரிப்பாளரோ அல்லது விநியோகஸ்தர்களோ டிஜிட்டல் நிறுவனங்களுக்குக் கடந்த 12 வருடங்களில் செலுத்திய கட்டணம் 800 கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குறைவான கட்டணத்தில் படங்களைத் திரையிட புதிய நிறுவனங்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது நிராகரிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கிற தயாரிப்பாளர் அப்படத்தின் மூலம் லாபம் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால், அப்படத்தின் பாடல்கள், காட்சிகளைப் பலவகைகளில் பயன்படுத்தி தொலைக்காட்சிகள், யூடியூப்பில் தனிநபர்கள் சம்பாதிப்பது அதிகமாக இருக்கிறது. தங்களது படத்தைத் தொலைநோக்கு பார்வையுடன் நீண்டகாலம் வருமானம் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டிங் செய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகள் தயாரிப்பாளர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை.

தான் தயாரித்த படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் முதல் போடாத டிஜிட்டல் நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலையில் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் உள்ளனர். தமிழ்ப் பட தயாரிப்பில் வருடந்தோறும் சுமார் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. சுமார் 50 கோடி ரூபாய் முதலீட்டில் டிஜிட்டல் நிறுவனத்தைத் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து தொடங்காமல் போனதால்தானே இந்த இடியாப்பச் சிக்கல். இதற்கான காரணத்தை தேடியபோது கிடைத்த விடையின் தொடக்க புள்ளி திருப்பூர் சுப்பிரமணி. அவருடன் கூட்டணி அமைத்த ராஜமன்னர். இவர்களுடன் இணைந்த வேலூர் சீனு. நேற்று சென்னையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் ‘அவனுக நம்மிடம் வந்து (தயாரிப்பாளர்கள்) கெஞ்சும் வரை தியேட்டரை திறக்கக் கூடாது’ எனக் கொக்கரித்த தென்காசி பிரதாப் ராஜா. இவர்கள் அனைவரும் ஓர் அணி. ‘என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். எனது தனி ராஜ்ஜியத்துக்குள் தலையிடாதீர்கள். உங்களுக்கு என் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு’ என இந்த அணியுடன் உடன்படும் அபிராமி ராமநாதன். இவர்கள்தான் தமிழ் சினிமா போக்கைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

திருப்பூர் சுப்பிரமணிக்கு அடுத்து உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் ராஜமன்னார். இவர் தமிழ் சினிமாவில் உருவாகும் பஞ்சாயத்துகளுக்குத் தீர்ப்பு சொல்லும் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் முக்கிய புள்ளியாக உள்ளார். பொய்யான கிணற்றைக் காணோம் என சினிமாவில் வடிவேலு அலறுவார், இன்னும் சில மாதங்களில் வேலூர் தென்னமரத் தெருவைக் காணோம், கோவையில் கோபாலபுரத்தைக் காணோம், மதுரையில் தானப்ப முதலி தெருவைக் காணோம் என இப்பகுதிகளில் கடந்த ஐம்பதாண்டு காலமாக ரிலீஸ், ஷிப்டிங் என விநியோகத் தொழில் செய்து வந்தவர்கள் அலறப்போகிறார்கள்.

கோவையில் திருப்பூர் சுப்பிரமணியுடன் இணைந்து இப்பணியை செவ்வனே முடித்த ராஜமன்னாரின் அடுத்த இலக்கு மதுரை.

ஏற்கெனவே மதுரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரட்டையர் நிலை என்ன? நாளை காலை 7 மணிக்கு...

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 9 மா 2018