மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

சிறுநீரக தினம்: ரூ.8க்கு சிறுநீரகப் பரிசோதனை!

சிறுநீரக தினம்: ரூ.8க்கு சிறுநீரகப் பரிசோதனை!

உலக மகளிர் தினமும் உலக சிறுநீரக தினமும் இந்த ஆண்டு ஒன்றாக இணைந்து நேற்று (மார்ச் 8) வந்ததையொட்டி, டெல்லியில் இயங்கிவரும் லைப்லைன் ஆய்வகம் ஒன்று அனைவருக்கும் பயன்படும்வகையில் ஒரு சிறப்பு முகாமை நடத்தியது.

உலகம் முழுவதும், சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிறுநீரக தினம் உலக மகளிர் தினத்துடன் ஒன்றிணைந்து கொண்டாடப்பட்டது.

புது டெல்லியில், கிரீன் பார்க் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள லைப்லைன் லேபரட்டரிக்கு அருகில் இந்த முகாமுக்கான வசதிகள் செய்யப்பட்டது என்று டயக்னாஸ்டிக் மையம் தெரிவித்துள்ளது. நேற்று சிறுநீரக தினத்தையும், மகளிர் தினத்தையும் ஒட்டி, காலை 10 மணிக்குத் தொடங்கிய முகாமில் மாலை 6 மணி வரை, 8 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு சிறுநீரகப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து லைப்லைன் லேபரட்டரியின் இணை நிறுவனர் ஆஷா பட்நாகர் கூறியதாவது: “உலகளாவிய அளவில் சுமார் 195 மில்லியன் பெண்கள் நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒவ்வோர் ஆண்டும் இந்நோய் தாக்கி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையையும் 6 லட்சத்தை நெருங்குகிறது.

நாள்பட்ட சிறுநீரக நோய்கொண்ட பெண்கள் மாதவிடாய், பாலியல் செயல்பாடு, எலும்பு நோய், மன அழுத்தம் மற்றும் கர்ப்பச் சிக்கல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சுகாதார சவால்களை எதிர்கொள்கின்றனர். பெண்கள் தங்களின் உடல்நிலையைப் பற்றிய கவனம் இல்லாமல் இருப்பதால் அவர்களது சுகாதாரம் மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாகவே உள்ளது.

மேலும், சமூகத்தில், பொருளாதாரத்தில், கலாசாரத்தில் மற்றும் அரசியலில் சாதித்தவர்களைக் கொண்டாடும் ஒரு நாளாக உலக மகளிர் தினமான நேற்று (மார்ச் 8) அமைந்துள்ளது” என்று ஆஷா பட்நாகர் தெரிவித்துள்ளார்.

ஆண்களில் 12 சதவிகிதம் பேரும் பெண்களில் 14 சதவிகிதம் பேரும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகப் பெண்களை எளிதாகத் தாக்கும் சிறுநீரக நோய் குறித்து பெண்களிடையே அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon