மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 மா 2018

திரைப்படத் துறை வேலைநிறுத்தத்துக்கு கியூப் காரணமா?

திரைப்படத் துறை வேலைநிறுத்தத்துக்கு கியூப் காரணமா?

திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 13 - குறுந்தொடர்

இராமானுஜம்

திரைப்படத் தொழிலை தமிழகத்தில் கட்டமைத்து, அதைப் பாதுகாக்கவும், மேலும் வளர்த்துச் செல்லவும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைத்தவர்கள் இன்று இல்லை. 2500க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தமிழகத்தில் இருந்தபோது அவர்கள் அனைவரையும் ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப் பாடுபட்ட சேலம் கிருஷ்ணமூர்த்தி, திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் உரிமையாளர் டி.ராமானுஜம் இருவரும் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் தொடங்கி கட்டிக் காப்பாற்றி விட்டுச்சென்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வட்டிக்குக் கொடுக்கும் ஃபைனான்சியர்களின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகிறது.

அதன் விளைவுதான், ‘எங்களால் தியேட்டரை நடத்த முடியவில்லை. ஏதோ இப்ப நடக்கிற பொழப்பை உசுப்பேத்தி கெடுத்துவிடாதே. சினிமா பாவம் உன்னை சும்மா விடாது’ என்று கமெண்ட் எழுதியிருக்கிறார் ஒரு திரையரங்க உரிமையாளர். அதை நேற்று பிரசுரித்திருந்தோம்.

தமிழ் சினிமா தொடர்ந்து நஷ்டப்படுவதற்கும், நிலையற்ற வியாபாரத் தன்மைக்கும் என்ன காரணம்? இதை வெளிப்படையாக, அனுபவரீதியாக விவாதிக்கத் தகுதியான நபர்கள் தற்போது இல்லை. அதன் விளைவுதான், ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதைப் போல, வட்டிக்குக் கொடுப்பவர்கள் சினிமாவைத் தீர்மானிக்கின்றனர்.

ஒரு படம் நடித்த கதாநாயகன்கூட சம்பளம் ஒரு கோடி என்கிறார். இதைத் தட்டிக்கேட்கவும், தவறு எனச் சுட்டிக்காட்டவும் சினிமா ஆளுமைமிக்க, தகுதி படைத்த ஓர் ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் அல்லது ஒரு சூப்பர் குட் பிலிம்ஸ், ஒரு தேவர் பிலிம்ஸ், ஓர் ஆஸ்கார் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் படத்தயாரிப்பில் இல்லை. அதன் விளைவு, ஏன் வேலைநிறுத்தம், எதற்காக, யாருக்கு எதிராக என்பதைத் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் முடிவு செய்ய முடியாமல் தமிழ் சினிமாவை முடக்கிவைக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சுதந்திரமாகக் கொட்டகை நடத்திவந்தவர்கள் குறிப்பிட்ட சில நபர்களிடம் திரையரங்குகளைக் கொடுக்க வேண்டிய குழலை உருவாக்கி, நெருக்கடியை நேரடியாகத் தராமல் மறைமுகமாகக் கொடுத்தவர்கள்தான் தமிழ் சினிமாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்களைத்தான் ஆபத்பாந்தவன் என ஒரு தியேட்டர் உரிமையாளர் புகழ்கிறார்.

இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, தேர்தல் நேரத்தில் சில ஆயிரங்களுக்கு தங்கள் வாக்குகளை விற்றுவிட்டுத் தொடர் துன்பத்தை அனுபவிக்கும் மக்களின் நிலைதான் தியேட்டர் அதிபர்களுக்கும். பணத்துக்கு வாக்கை விற்றவன் உரிமையைக் கேட்க முடியாது. இலவச பொருள்களுக்குப் பதில் அதை வாங்கும் சக்திக்கு எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுங்கள் எனக் கேட்காதவன் ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு ஆளான நிலை தான் தியேட்டர் அதிபர்களின், சுயமாக சிந்திக்காமல் சில கங்காணிகள் வாக்குறுதியை நம்பி இலவச டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியவர்கள். தற்போது தங்கள் முன் இருக்கும் பிரச்சினை என்ன என்பதை தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் இனம் காணமுடியாமல் தவறான முடிவுகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.

இலவசமாக புரொஜக்டரை கியூப் நிறுவனம் தியேட்டர்களுக்கு வழங்கியதால்தான் படங்களைத் திரையிட அதிக கட்டணம் என்கிற காரணம் இங்கு முன்வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் 30% தியேட்டர்கள் சொந்தமாக புரொஜக்டர்களை நிறுவியிருக்கிறார்கள். அந்த தியேட்டர்களுக்கும் அதே கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இதுவரை கேட்கவில்லை. அந்தக் கூடுதல் பணம் யாருக்குப் போகிறது? கியூப் நிறுவனம் 30% கட்டணக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டதாக முதலில் கூறப்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் யார் என்பதை வெளிப்படையாக பொது வெளியில் கியூப் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது யார்? என்னப் பேசப்பட்டது? என்பது அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கே தெரியவில்லை என்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்க முயற்சிகளுக்கு நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடும் முயற்சியைத் தொடர்ந்து செய்துவருவதாகக் கூறப்படுகிறது. குழப்பமான சூழலில் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் வேலைநிறுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பேசித் தீர்க்க வேண்டியதைத் தீவிரமாக்கி இருக்கிறார்கள். எங்கே போகிறது தமிழ் சினிமா? இதற்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு?

திங்கட்கிழமை காலை 7 மணி பதிப்பில்...

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

ஞாயிறு 11 மா 2018