மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 மா 2018

தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?

தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?

திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 16 - குறுந்தொடர்

இராமானுஜம்

ஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, பார்க்கிங் மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கியதோ, அதேபோல் புரொஜக்டர் (Projector) வசதியும் அதனுள்ளயே அடங்கும். ஃபிலிம் புரொஜக்டர்கள் மூலம் படங்கள் ஒளிபரப்பப்பட்ட வரை எந்தக் குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. ஒரு திரையரங்கத்துக்கு டிக்கெட் விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அதனுடன் சேர்த்து விளம்பரம், பார்க்கிங் மற்றும் கேன்டீன் வருவாயும் கிடைத்தன.

Analog Format முறை:

ஒரு படத்தை தயாரிப்பாளரிடமிருந்து வாங்கும்போது, ஏரியா உரிமம் வாங்கும் விநியோகஸ்தர் அவர் வெளியிடும் திரையரங்க எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு படப்பெட்டி வாங்கி வெளியிடுவார். அந்தச் செலவுகள் விநியோக உரிமத்துடன் கூடுதலாக ஒரு பிரின்டுக்கு சுமார் நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது.

தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உள்ள புரிதலில் இந்தச் செலவு இருவரில் எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் பொதுவாகவும் இருந்துவந்தது.

திரையரங்கத்துக்கு படம் உறுதியானவுடன் பெட்டி அனுப்பி வைக்கப்படும். அதை திரையரங்க ஆபரேட்டர்கள் திரையரங்குக்குச் சொந்தமான புரொஜக்டரில் படத்தை ஓட்டுவார்.

ஃபிலிம் சார்ந்த செலவுகள்:

இந்தத் தொழில் ஓரளவு சுமுகமாக நடந்துவந்த ஒருகட்டத்தில் ஃபிலிம் விலை அதிகரிக்க ஒரு பிரின்ட் ரூபாய் ஐம்பதாயிரத்தைத் தாண்ட ஆரம்பித்தது. இதனால் 100 திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட ரூபாய் ஐம்பது லட்சம் வரை செலவானது. மேலும், ஒரு படத்துக்கு சுமார் ஐம்பது லட்சம் ஃபிலிம் கேமராவில் படம்பிடிக்க (Film cost + Negative development) செலவானது. படம் எடுப்பதும் அதிக முதலீடு கொண்ட ஒரு துறையாக இருந்துவந்தது.

Digital Format அறிமுகம்:

இந்த நிலையில் டிஜிட்டல் புரொஜக்ஷன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு ஃபிலிம் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஃபிலிம் நெகட்டிவில் இருந்து டிஜிட்டலாக ஸ்கேன் செய்து மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. டிஜிட்டல் கேமரா வந்தவுடன் ஃபிலிம் சார்ந்த செலவுகள் (film cost/development cost) குறைந்து அனைவரும் டிஜிட்டல் முறையையே விரும்ப ஆரம்பித்தனர்.

இதில் ஒரு பிரின்டுக்கு வெறும் இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே செலவானது. தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக டிஜிட்டலை விரும்ப ஆரம்பித்தனர். முற்றிலும் டிஜிட்டல்மயம் ஆனது. திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவு குறைந்து நிறைய தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.

இங்கே சில கேள்விகள் எழுகின்றன...

முன்பு தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் செய்த செலவை விட இன்று குறைவாகத்தானே செலவாகிறது?

டிஜிட்டல் டெக்னாலஜியால் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டும் வெளியிடப்பட்டும் வருகின்றனவே? பின் எதற்கு இந்தப் போராட்டம்?

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் ஆகிய இந்த மூன்று வர்க்கத்தினரின் அறியாமை டிஜிட்டல் வசதி வழங்க வந்த சில நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு இந்த 10 வருடத்தில் சுமார் ரூ.1,500 கோடிகளை முதலீடு செய்தும், 90% திரையரங்குகள் இன்று சொந்த புரொஜக்டர் இல்லாமலும், காலம் காலமாகச் சம்பாதித்துவந்த விளம்பர வருவாயை இழந்தும் உள்ளனர். இதைத் திரைத் துறையில் சமீபத்தில் நடந்த ஒரு மிகப் பெரும் ஊழலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

புரொஜக்டர் சேவைக் கட்டணம் அல்லது VPF - Visual Projection Fee :

டிஜிட்டல்தான் வருங்காலத்துக்கான தொழில்நுட்பம் என்பதால் வெளிநாடுகளில் சோனி போன்ற பன்னாட்டுத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் திரையரங்குகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றக் கூறியபோது ஒரு திரையரங்கத்துக்கு டிஜிட்டல் புரொஜக்டர் மற்றும் அதன் பிளேயர் அடங்கிய சர்வர் ஆகியவற்றைப் பொருத்தச் சுமார் ரூ.20 லட்சம் முதல் 60 லட்சம் வரை செலவானது. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் செலவுகளைக் குறைக்க நாங்கள் எதற்கு இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனத் திரையரங்குகள் மறுத்தனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க டிஜிட்டல் உபகரண நிறுவனங்கள் மற்றும் திரைத் துறையினர் ஒரு வழி கண்டனர்.

அப்போது உருவானதுதான் VPF (Visual Projection Fee) முறை. அதன் அம்சங்கள்:

புரொஜக்டர் மற்றும் சர்வரை அமைப்பதற்கான செலவை டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வது; ஒரு படத்துக்கு சுமார் இருபதாயிரம் ரூபாய் வீதம், ஐந்து வருடங்களுக்குப் படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது; வழங்கப்பட்ட கருவிகள் மற்றும் படம் ஒளிபரப்பும் சேவை செலவுகளை மீட்டெடுத்த பின்னர் புரொஜக்டர் அந்தத் திரையரங்கத்துக்குச் சொந்தம். டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்கள் அதற்குப் பின்னர் வெறும் சேவை வரி மட்டும் பெற்றுக்கொள்வது என உலகளாவிய முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த முறையில் உலகம் முழுவதும் 2018க்குப் பின் VPF இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு ஐந்து வருடத்துக்கு மேல் ஆன திரையரங்குகளுக்கு, ஆங்கிலப் படங்களுக்கு VPF இல்லை. வெறும் சர்வீஸ் சார்ஜ் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏமாந்தது வழக்கம் போல் இந்தியர்கள்தான்.

இந்தியத் திரையுலகம் ஏமாற்றப்பட்டது எப்படி?

இங்கு டிஜிட்டல் மாற்றம் ஆரம்பித்த காலத்தில் ஒரு சில திரையரங்குகள் டிஜிட்டல் புரொஜக்டர்களைச் சொந்தமாக வாங்கினர். திரையரங்குகள் புரொஜக்டர் வாங்கத் தயக்கம் காட்டியபோது, DSP (டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்) நிறுவனங்கள் நாங்களே உங்களுக்கு புரொஜக்டர் இலவசமாகத் தருகிறோம் என்றனர். மேலும் பிரின்ட் செலவில் பாதிதான் ஆகும் என்றனர். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, இந்தப் பத்திரத்தில் கையெழுத்து போட்டால் போதும், கூடவே விளம்பர வருவாயை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றனர். புரொஜக்டர் பணம் வசூல் ஆனவுடன் விளம்பர வருவாயை நாம் பகிர்ந்துகொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. அப்போது விளம்பர வருவாய் அதிகம் இல்லாத காலத்தில் திரையரங்கு உரிமையாளருக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் ஒரு புரொஜக்டர் திரையரங்கில் பொருத்தப்பட்டு அதற்கான முதலீடு VPF மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈட்டப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இன்னும் முன்பைவிட அதிகம் VPF கேட்கப்படுகிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தரப்பில் இந்நேரம் புரொஜக்டர் சொந்தமாகி இருக்க வேண்டுமே எனக் கேட்க ஆரம்பித்த பின்னர்தான் அனைவருக்கும் பேரதிர்ச்சியான தகவல் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் சேவை ஒப்பந்தங்கள். உங்களுக்கு புரொஜக்டர் எதுவும் சொந்தம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் வேறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஆறு மாதத்திலிருந்து பதினாறு மாதங்களுக்கு முன்பாக இதைத் தெரிவிக்க வேண்டும். ஒப்பந்தத்தை முறித்தால் நீங்கள் கையெழுத்திட்ட காலம் முடியும் வரை வருடம் ரூ.10 லட்சம் வரை (E- Cinema projector விலையே வெறும் ரூ.6 லட்சம்தான்) எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பன போன்ற கழுத்தை நெரிக்கும் ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்திட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

நிறைய திரையரங்கங்களில் ஒப்பந்தங்கள் முடிந்தபோது வேறு பழைய, புது புரொஜெக்டர், பல்பு, சவுண்ட் சிஸ்டம் என ஏதாவது ஒன்று இலவசமாகத் தரப்பட்டு அந்த மயக்கத்தில் முற்றிலும் ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பல முறை VPF பற்றிய விஷயங்களை பேச முற்படும்போதெல்லாம் அசிங்கப்பட்டதற்கு அவர்கள் போட்டுள்ள இந்த ஒப்பந்தம்தான் காரணம்.

இந்த ஏமாற்று விஷயங்கள் தெரிந்த சில திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து கேட்டபோதெல்லாம் அவர்களுக்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் VPF அல்லது விளம்பரத்தில் பங்கீடு அதிகமாக தந்தோ, இன்னும் அதிநவீன உபகரணங்கள் இலவசமாக தந்தோ வாயடைக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் முந்தைய நஷ்டங்களால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதுள்ள கோபத்தினாலும் சில முக்கியத் திரையரங்கு உரிமையாளர்கள் DSPக்குப் எதிராக பேசாமல் மௌனம் காக்கின்றனர். இவர்கள் தவிர்த்துப் பல திரையரங்கு உரிமையாளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.

ஒரு தொழில்நுட்ப மாற்றம் நடைபெற தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் முதலீடு செய்யப்போக, அது இன்று திரைத் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒரு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அடிமையாகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டு மணி நேரப் படம் பார்க்க மக்கள் 20 நிமிடங்கள் விளம்பரம் பார்க்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் விளம்பரத்தைத் தங்கள் படத்துடன் இணைக்கவே காசு கொடுக்க வேண்டிய சூழலுக்கு, அதுவும் இவர்கள் நினைத்தால்தான் போட முடியும் எனும் கொடூரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விநியோகஸ்தர் சங்கம், இது தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர் பிரச்சினை என்று நினைக்கிறது போலும். நடுநிலை காப்போம் என்று இருக்கிறது.

காலம் காலமாக ஏமாந்துவந்த தயாரிப்பாளர்கள் இனிமேலும் ஏமாற முடியாது எனும் நிலை வருகையில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஒரு வருடத்தில் படம் தயாரிப்பவர்களில் எழுபது முதல் எண்பது சதவிகிதம் புது தயாரிப்பாளர்களே. இவர்களில் 90% மேல் மொத்த முதலீட்டையும் இழந்து வெளியேறிவிடுகின்றனர்.

மொத்த முதலீட்டையும் இழக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு மொத்த முதலீட்டில் இந்த VPF செலவு 3% கண்ணுக்கே புலப்படாத ஒன்றாகும்.

ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் ரூ.40 கோடிக்கும் மேல் VPF மூலம் தயாரிப்பாளர்கள் இழக்கின்றனர். திரும்பிப் படம் எடுக்கவே கஷ்டமான சூழ்நிலையில் இந்த விஷயத்தைப் பார்க்கத் தனி தயாரிப்பாளரால் முடியாது. ஆகவேதான் இந்த மொத்தப் போராட்டமும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தோள்களில் உள்ளது. என்ன செய்யப்போகிறார்கள்?

நாளை காலை 7 மணி பதிப்பில்.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 14 மா 2018