மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

ராஜா கையை வெச்சா ராங்கா போனதில்லை!

ராஜா கையை வெச்சா ராங்கா போனதில்லை!

2ஜி வழக்கு தொடர்பான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய ‘2ஜி - அவிழும் உண்மைகள்’ புத்தகத்தை வெளியிட்ட ஸ்டாலின், “ராஜா கையை வெச்சா ராங்கா போனதில்லை” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

2ஜி வழக்கில் இருந்து விடுதலையான ஆ.ராசா, ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற ஆங்கில நூலைக் கடந்த ஜனவரி 20ஆம் தேதி டெல்லியில் உள்ள ரஃபி மார்க் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சபாநாயகர் அரங்கில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஆ.ராசா வெளியிட்ட இந்தப் புத்தகத்தை காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெற்றுக்கொண்டார். அப்போதே இந்தப் புத்தகம் தமிழில் எப்போது வரும் என்ற கேள்வி அவர் முன்வைக்கப்பட்டது. அதற்கு, தமிழில் புத்தகத்தை விரைவில் ஸ்டாலின் வெளியிடுவார் என ராசா பதிலளித்திருந்தார்.

அதன்படி, ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பான 2ஜி - அவிழும் உண்மைகள் புத்தகத்தின் வெளியீடு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று (மார்ச் 21) மாலை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடத் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். ‘இந்து’ என்.ராம், வைரமுத்து, சுப. வீரபாண்டியன் ஆகியோர் வழ்த்துரை வழங்கினர்.

ஏற்புரை வழங்கிய ஆ.ராசா, “2ஜி குறித்து முதன்முதலாக ஊடகங்கள் எழுதின. என் தரப்பு நியாயங்களை யாரும் கேட்கவில்லை. சிபிஐ விசாரணை செய்தது, உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது, நாடாளுமன்ற ஜெ.பி.சி விசாரித்தார்கள். யாரும் என்னை அழைக்கவில்லை. என் தரப்பை கேட்க விரும்பவில்லை. என் தரப்பை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சிறையில் இருக்கும்போது முடிவு செய்தேன். நான் எழுதிய புத்தகத்துக்கு இதுவரை யாரும் வாயைத் திறக்கவில்லை என்பது நமக்கு கிடைத்த வெற்றி” என்று பேசினார்.

வீரமணி பேசும்போது, “கீழே இருந்து மேல் செல்வார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பொய் சொன்னார் என்று பதிவு செய்துள்ளது இந்த புத்தகத்தை தவிர வேறு எதுவும் இல்லை. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் இனிமேல் அவர்கள் வெற்றி பெற முடியாது” என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை சுட்டிக்காட்டி பேசினார்.

‘ராஜா கையை வைத்தால் அது ராங்கா போனதில்லை’ என பாடி தனது பேச்சை தொடங்கிய ஸ்டாலின், இது புத்த வெளியீட்டு விழா மட்டும் அல்ல. திமுக விடுதலைப் பெற்ற விழா என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.

“எழுச்சியோடு, கம்பீரத்தோடு ராசா இந்த விழாவை நடத்திக்கொண்டு இருக்கிறார். மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்கு நம்பகமாக விளங்கிக்கொண்டு இருப்பது திமுக. அப்படிப்பட்ட திமுக மீது வேண்டுமென்ற புனையப்பட்டதுதான் 2ஜி வழக்கு. அந்த வழக்கில் இருந்து தற்போது நாம் விடுதலைப் பெற்றுள்ளோம். 2ஜி வழக்கில் நீதிபதி சைனி வழங்கியது சாதாரண, எளிதான தீர்ப்பல்ல.

சதி வலைகளையெல்லாம் முறியடித்து வெற்றி என்ற தீர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. நீதித்துறைக்கு உள்ள சுதந்திரத்தை யாராலும் ஆட்டிப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ முடியது என்பதற்கு இந்தத் தீர்ப்பு சாட்சியமாக உள்ளது. 16.5.2007ஆம் தேதியை ராசா மறந்திருக்க மாட்டார். பெரம்பலூரில் இருந்து வந்த ராசாவை மத்திய அமைச்சராகக் கலைஞர் பதவி ஏற்க வைத்தது அன்றைய தினம்தான். அதேபோல், 14.10.2010 என்ற தேதியையும் ராசா மறந்திருக்க முடியாது. அன்றுதான் ராசாவை அழைத்து கலைஞர் ஒரு கட்டளை பிறப்பித்தார். அந்தக் கட்டளையை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு டெல்லி சென்று தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் ராசா.

இன்றைக்கு மத்தியில் எத்தனையோ ஊழல்கள் குறித்து தகவல் வந்துகொண்டு இருக்கிறது. அப்படி ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை ராஜினாமா செய்ய சொல்லும் யோக்கியதை யாருக்காவது உள்ளதா?

‘என் தம்பி நிரபராதி என நிரூபிப்பான்’ எனக் கலைஞர் கூறியிருந்தார். அதற்குச் சாட்சியாக வந்துள்ள தீர்ப்பு இது” என்று குறிப்பிட்டார்.

புதன், 21 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon